×

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல்

புதுச்சேரி: “இலக்கியச் செல்வர்” என்று அனைவராலும் போற்றப்பட்ட முதுபெரும் அரசியல் தலைவரும் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.

சிறந்த தேசப் பற்றாளராக விளங்கிய அவர், நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தின்மீது ஆழ்ந்த பற்று கொண்டு தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனிற்காகவும் பல அரும்பணிகளை ஆற்றிய அவர், தமிழில் மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்து முதன்முதலில் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரிய குமரி அனந்தன், விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடவும், தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெறவும் போராடி தமிழ் மொழிக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

தமிழுக்குத் தொண்டாற்றி பெரும் தமிழ்ப்பற்றாளராக விளங்கிய தகைசால் தமிழர் திரு குமரி அனந்தன் அவர்களின் மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy ,Congress ,Kumari Ananthan ,Lieutenant Governor ,Tamilasai Soundararajan ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...