×

கட்டுகட்டாக பணம் சிக்கிய விவகாரம்; டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க 3 பேர் குழு அமைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி

புதுடெல்லி: கட்டுகட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விசாரிக்க 3 பேர் விசாரணை கமிட்டி அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த 14ம் தேதி ஹோலி பண்டிகையின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு அறையில் கணக்கில் வராத பெரும் தொகை இருப்பதை கண்டுபிடித்தனர். தீயை அணைத்த பின்னர், உயர் போலீஸ் அதிகாரிகள் நீதிபதியின் வீட்டிற்கு வந்து பணத்தை கைப்பற்றி எடுத்து சென்றனர். இதுகுறித்த விபரங்கள் ஒன்றிய நீதித்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டன.

இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கவனத்திற்கு ஒன்றிய அரசு கொண்டு சென்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் கூடிய அவசர கொலீஜியம், குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்ய முடிவு செய்தது. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணை கமிட்டியை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இக்குழு துறை சார்ந்த விசாரணையை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை அறிக்கை வரும் வரையிலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த பணியும் ஒதுக்கக் கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிக்கையும் அதற்கான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் இரண்டுமே உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.

The post கட்டுகட்டாக பணம் சிக்கிய விவகாரம்; டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க 3 பேர் குழு அமைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Supreme Court ,New Delhi ,Chief Justice ,Sanjiv Khanna ,Yashwant Verma ,Yashwant… ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனராக தமிழர் நியமனம்