×

சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் இயந்திர கோளாறு: 178 பேர் உயிர்தப்பினர்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அபுதாபி செல்லும் எத்தியாட் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது. இதில், விமானத்தில் இருந்த 168 பயணிகள் உள்பட 178 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் அபுதாபி செல்லும் எத்தியாட் விமானம் புறப்படத் தயாரானது. இதில் 168 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 178 பேர் ஏறி அமர்ந்திருந்தனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, ஓடுபாதையில் விமானம் ஓடத் துவங்கியது. அப்போது விமானத்தின் இன்ஜின் பகுதியில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டு, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஓடுபாதைக்கு இழுவை வண்டிகள் வேகமாக வந்து, அங்கு நின்றிருந்த எத்தியாட் விமானத்தை மீண்டும் இழுத்து வந்து, விமானநிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்துக்குள் பொறியாளர்கள் ஏறி, இயந்திரக் கோளாறுகளை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், காலை 6 மணிவரை விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு, அனைவரும் விமானநிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்ட எத்தியாட் விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறுகளை சரிசெய்யும் பணியில் விமான பொறியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த விமானத்தில் அபுதாபி செல்ல வேண்டிய 168 பயணிகளும் விமான ஓய்வறையில் பெரிதும் பரிதவித்து வருகின்றனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் சரிசெய்யப்பட்டால், அந்த விமானம் இன்று அபுதாபிக்கு தாமதமாகப் புறப்பட்டு செல்லும். இல்லையேல் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு, அதில் செல்ல வேண்டிய பயணிகள் சென்னை நகர ஓட்டல்களில் தங்கவைக்கப்படுவர். பின்னர் விமான கோளாறுகள் சரிசெய்யப்பட்டதும், இன்றிரவு அல்லது நாளை அதிகாலை அபுதாபிக்கு எத்தியாட் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அபுதாபி செல்லும் எத்தியாட் விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறுகளை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து கூறி உடனடி நடவடிக்கை எடுத்ததால், அந்த விமானம் விபத்திலிருந்து தப்பியதோடு, அதில் இருந்த 168 பயணிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 178 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால் சென்னை விமானநிலையத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

The post சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் இயந்திர கோளாறு: 178 பேர் உயிர்தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Abu ,Dhabi ,Meenambakkam ,Etihad ,Chennai airport ,Abu Dhabi ,-Abu ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...