×

தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்ட கூடாது: ராஜேந்திர பாலாஜிக்கு இபிஎஸ் மறைமுக எச்சரிக்கை

சென்னை: தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்ட கூடாது என அதிமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பிரதானமாக இருக்கக்கூடிய திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக, அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் பலம், பலவீனம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக தொகுதி நிலவரம் குறித்து அறிவதற்காக மூத்த நிர்வாகிகள் தலைமையில் கள ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்சி ரீதியிலான 82 மாவட்ட நிர்வாகிகளை கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இந்த நிலையில் அமைப்பு ரீதியிலான இந்த 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இருந்தபடி எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

நிர்வாகிகள் அனைவரும் தங்களது மாவட்டத்தில் இருந்தபடியே கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவின் சாதனைகளை எடுத்துரைக்கும் வண்ணம் அனைத்து மாவட்டங்களில் இருக்கும் நிர்வாகிகள் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூத் கமிட்டியை விரைவாக அமைத்து அந்த பட்டியலை தலைமைக்கு அனுப்ப வேண்டும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் முன்னிறுத்தி விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜிக்கும், மாஃபா பாண்டியராஜனுக்கும் இடையே, மோதல் இருந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன், விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகியை, மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரத்தை தொடர்ந்து அதிமுகவில் குறுநில மன்னர் போல் ராஜேந்திர பாலாஜி செயல்படுவதாக மாஃபா பாண்டியராஜன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நான் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதிமுவில் இருப்பவன்; கட்சி மாறி வந்தவன் அல்ல.

நான் குறுநில மன்னன் தான் என எதிர்க்கருத்தை தெரிவித்திருந்தார். இருவருக்கும் இடையேயான மோதல் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு சென்றுள்ளது. மேலும், நேரடியாக எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று பாண்டியராஜன் தன்னை ராஜேந்திர பாலாஜி விமர்சித்து வருவது குறித்து புகார் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாகவே, நேற்றைய கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதாவது ‘‘தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கூட்டணி குறித்த முடிவை தலைமை எடுக்கும் எனவே, மாவட்ட நிர்வாகிகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்யுங்கள். நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. கூட்டணி விவகாரம் குறித்து யாருடனும் விவாதிக்கக்கூடாது’’ என அவர் பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

* காணொலி ஆய்வுக்கூட்டத்தில் செங்கோட்டையனிடம் பேசுவதை தவிர்த்த எடப்பாடி
எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். கோபி எஸ்.பி. நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களான முன்னாள் எம்பிக்கள் சத்தியபாமா, காளியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.ரமணிதரன், ஈஸ்வரன் உள்ளிட்டோருடன் பங்கேற்றார்.

கடந்த வாரம் அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பி பிரச்னையை ஏற்படுத்திய பிரவீன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி காணொலி கூட்டத்தில் பங்கேற்க ஈரோடு புறநகர் அதிமுக சார்பில் மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் 87 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் வாயிலில் ஒட்டப்பட்டு, அதில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறப்பட்டு அவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மற்ற நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் கூட்டத்தில் கலந்து கொண்ட தொகுதி பார்வையாளர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட அனைவரும் கூட்ட அரங்கிற்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு எடப்பாடியும், ெசங்கோட்டையனும் பேச உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புடன் நிர்வாகிகள் காத்திருந்தனர். மற்ற மாவட்டங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் தலைமையிலான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் பேசவில்லை.

எடப்பாடி பேசியதை மட்டும் இங்குள்ள நிர்வாகிகள் கேட்டுள்ளனர். கூட்டம் முடிந்தபோது செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுக வெற்றி பெற்று உள்ள சில மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி கலந்தாலோசிக்கவில்லை என்றும், எந்த பகுதியில் எல்லாம் அதிமுக தோல்வியை அடைந்ததோ அந்த மாவட்ட நிர்வாகிகளிடம் மட்டுமே பேசியதாக கூறப்படுகிறது. ஒரு மாதமாக இருவருக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு சரியாகி விடும் என எதிர்பார்த்த நிர்வாகிகள், செங்கோட்டையனிடம் பேசுவதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்ததால் இருவருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளதாகவே கூறப்படுகிறது.

* கையெடுத்து கும்பிடு
கூட்ட அரங்கிற்கு காலை 9 மணிக்கே வந்த கே.ஏ.செங்கோட்டையன், செய்தியாளர்களை பார்த்து, ‘‘உங்களால் தான் பிரச்னை அதிகமாகிறது. தயவு செய்து இங்கு இருக்க வேண்டாம். சென்று விடுங்கள்’’ என கூறி கையெடுத்து கும்பிட்டார்.

The post தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்ட கூடாது: ராஜேந்திர பாலாஜிக்கு இபிஎஸ் மறைமுக எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : EPS ,Rajendra Balaji ,Chennai ,Edappadi Palaniswami ,AIADMK ,DMK ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...