அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் குஜராத்துக்கு எதிரான 2வது நாள் ஆட்டத்தில் கேரளா அணி அபாரமாக ஆடி 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்தது. நேற்று முன்தினம் முதல் இன்னிங்சை துவக்கிய கேரளா அணி, ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்திருந்தது. 2ம் நாளான நேற்று ஆட்டத்தை துவக்கிய சச்சின் பேபி 69 ரன்னில் அவுட்டானார். மற்றொரு வீரர் முகம்மது அசாருதீன் அமர்க்களமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 149 ரன் குவித்தார். தவிர, ஜலஜ் சக்சேனா, 30, சல்மான நிஸார் 52 ரன் எடுத்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் கேரளா 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஆதித்ய சர்வதே 10 ரன்னுடன் களத்தில் உள்ளார். குஜராத்தின் அர்சன் நாக்வஸ்வல்லா 3 விக்கெட் வீழ்த்தினார். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
* விதர்பா வேகத்தில்… மும்பை சோகத்தில்
நாக்பூரில் நடந்த மற்றொரு அரையிறுதியில் மும்பை அணிக்கு எதிராக ஆடிய விதர்பா அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்திருந்தது. 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த விதர்பா, மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன் மட்டுமே சேர்த்தது. இதனால், 383 ரன்னுக்கு விதர்பாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து மும்பை அணி முதல் இன்னிங்சை துவங்கியது. துவக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 9 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் ஆகாஷ் ஆனந்த் கடைசி வரை அவுட்டாகாமல் 67 ரன்னுடன் களத்தில் இருந்தார். இருப்பினும் விதர்பா பந்து வீச்சாளர்களின் அற்புத பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. விதர்பா அணியின் பார்த் ரெகாடே 16 ரன் தந்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
The post ரஞ்சி கோப்பை அரையிறுதி அகமதாபாத் மைதானத்தில் நிலைகொண்ட கேரள புயல்: 418 ரன் குவித்து அபாரம் appeared first on Dinakaran.
