அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 3-0 என்ற கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்றுள்ள பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் கோப்பையைத் தன்வசமே தக்கவைத்துக் கொண்டுள்ளது.
வெற்றிக்கு 228 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் ஐந்தாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 207/6 என்ற ஸ்கோரில் இருந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்தது. களத்தில் இருந்த வில் ஜாக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் ஜோடி முதல் செஷனில் அபாரமாக விளையாடி 78 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக ஜேமி ஸ்மித் 60 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்த நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் பிரைடன் கார்ஸ் மற்றும் வில் ஜாக்ஸ் ஜோடி 52 ரன்கள் சேர்த்து வெற்றியை நெருங்க முயன்றனர். ஆனால், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வில் ஜாக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இறுதியில் இங்கிலாந்து அணி 102.5 ஓவர்களில் 352 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். அவர் முதல் இன்னிங்ஸில் 106 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களும் குவித்து அசத்தினார். இதன் மூலம் ஒரு ஆஷஸ் டெஸ்டில் சதம் மற்றும் 5-க்கும் மேற்பட்ட ஆட்டமிழப்புகளைச் செய்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்களுடன் அவர் இணைந்தார்.
