மவுங்கானுய்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து, அபாரமாக ரன் குவித்து, 462 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. 3வது டெஸ்ட் போட்டி, மவுங்கானுய் நகரில், கடந்த 18ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 575 ரன்கள் குவித்தது. பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில், 4ம் நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஆண்டர்சன் பிலிப் 17 ரன்களில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து, ஷாய் ஹோப் 4, ஜெய்டன் சீல்ஸ் 15, கெமர் ரோச் 0 ரன்னில் வீழ்ந்ததை அடுத்து, வெஸ்ட் இண்டீசின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதன் பின், 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்தின் துவக்க வீரர்கள் கேப்டன் டாம் லாதம், டெவான் கான்வே, ஒரு நாள் போட்டியில் ஆடுவதை போன்று, வெஸ்ட் இண்டீசின் பந்துகளை துவம்சம் செய்து ரன்களை குவித்தனர். இந்த இணை 192 ரன்கள் குவித்திருந்தபோது, முதல் விக்கெட்டாக டெவான் கான்வே 100 ரன்னில் (139 பந்து, 3 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில், டாம் லாதம் 101 ரன்னில் (130 பந்து 2 சிக்சர், 9 பவுண்டரி) அவுட்டானார். 54 ஓவர் முடிவில், நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 306 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. அதையடுத்து, 462 ரன் வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்திருந்தது. ஜான் கேம்ப்பெல் 2, பிராண்டன் கிங் 37 ரன்னுடன் களத்தில் உள்ளனர். 5ம் நாளான இன்று, 419 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடரும் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை தவிர்க்க போராட வேண்டியிருக்கும் சூழல் காணப்படுகிறது.
ரன் மெஷின் கான்வேபுதிய உலக சாதனை
- டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களில், ஒரு இரட்டைச்சதம் (227 ரன்), ஒரு சதம் (100 ரன்) விளாசிய ஒரே வீரர் டெவான் கான்வே.
- டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் தலா இரு சதங்கள் விளாசிய முதல் துவக்க வீரர்களாக, நியூசிலாந்தின் டாம் லாதம் (137 ரன், 101 ரன்), டெவான் கான்வே (227 ரன், 100 ரன்) உருவெடுத்து வரலாற்று சாதனையை அரங்கேற்றி உள்ளனர்.
- டெஸ்ட் போட்டியின் துவக்க வீரர்களாக களமிறங்கி 2வது அதிக ரன்களை குவித்த இணையாக, நியூசிலாந்தின் டாம் லாதம், டெவான் கான்வே (மொத்தம் 544 ரன்) புதிய சாதனை படைத்துள்ளனர்.
- டெஸ்ட் போட்டியின் துவக்க வீரர்களாக களமிறங்கி உலகளவில் அதிக ரன் குவித்த இணையாக, தென் ஆப்ரிக்காவின் கிரீமி ஸ்மித், ஹெர்ஷெல் கிப்ஸ் இணை (மொத்தம் 550 ரன், எதிரணி இங்கிலாந்து, ஆண்டு 2003) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
