- இளைஞர் ஆசிய கோப்பை
- பாக்கிஸ்தான்
- இந்தியா
- துபாய்
- அண்டர் 19 இளைஞர் ஆசிய கோப்பை
- கிரிக்கெட் இறுதி
- 12 வது இளைஞர் ஆசிய கோ
துபாய்: துபாயில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. துபாயில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, 12வது இளையோர் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வந்தது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், மலேசியா ஆகிய 8 அணிகள் மோதின. அரை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வென்று, இந்தியா இறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு அரை இறுதியில் வங்கதேசத்தை தோற்கடித்து, பாகிஸ்தான் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி, துபாயில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான ஹம்சா ஸாஹூர் 18 ரன்னில் அவுட்டானார். இருப்பினும், மற்றொரு துவக்க வீரர் சமீர் மினாஸ், 113 பந்துகளில் 9 சிக்சர் 17 பவுண்டரிகள் விளாசி 172 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடி ஆட்டத்தால், பாகிஸ்தான், 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன் குவித்தது. பின், 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி 26 ரன்னிலும், கேப்டன் ஆயுஷ் மாத்ரே 2 ரன்னிலும் அவுட்டாகி மோசமான துவக்கத்தை தந்தனர். பின் வந்தோரில் தீபேஷ் தேவேந்திரன் மட்டும் அதிகபட்சமாக 36 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால், 26.2 ஓவரில் இந்தியா 156 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், 191 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
