×

வந்த மண்ணில் தோற்று நொந்த இங்கிலாந்து: ஆஷஸ் கிரிக்கெட் தொடரை ஆஸி கைப்பற்றி சாதனை

அடிலெய்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்டில், ஆஸ்திரேலியா அணி 82 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அட்டகாச வெற்றிகளை ஆஸ்திரேலியா பதிவு செய்த நிலையில், இந்த அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் கடந்த 17ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்கில் ஆஸ்திரேலியா 371 ரன்னும், இங்கிலாந்து 286 ரன்களும் எடுத்தன.

பின் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் குவித்த 170 ரன் உதவியுடன், 349 ரன்கள் சேர்த்து, இங்கி வெற்றி பெற 435 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், 4ம் நாளில் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, ஆஸி வீரர்களின் துல்லிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து, 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. இந்நிலையில், 5ம் நாளான நேற்று, இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஜேமி ஸ்மித் 60 ரன்களுக்கு ஸ்டார்க் பந்தில் வீழ்ந்ததை அடுத்து இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது. அவரைத் தொடர்ந்து, வில் ஜாக்ஸ் 47, ஜோப்ரா ஆர்ச்சர் 3, ஜோஷ் டங் 1 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 352 ரன்னுடன் இங்கிலாந்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான் தலா 3 விக்கெட்டுகளை பறித்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலியா 82 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை ஆஸி அணி, 3-0 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆட்ட நாயகனாக, முதல் இன்னிங்சில் 106, 2ம் இன்னிங்சில் 72 ரன் மற்றும் 6 கேட்ச்கள் பிடித்த ஆஸ்திரேலியா அணி வீரர் அலெக்ஸ் கேரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : England ,Aussie ,Ashes ,Adelaide ,Australia ,England cricket ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...