- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- பாரத்
- இந்து முன்னணி
- ஏகாம்பரேஸ்வரர் கோயில்
- கந்தகோட்டம்
- திருப்பரங்குன்றம் மலை
- நீதிபதி
- ஜி.கே. இளந்திரியன்…
சென்னை: திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பு தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கோரும் பேரணி பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை என்கிற காரணம் மட்டுமின்றி வேறு எந்த இடத்தில் பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த போராட்டகாரர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்த முடியாது. திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மதத்தினருக்கு இடையிலான பிரச்சனைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்பட்டது.
இது தொடர்பான தீர்மானத்தை மதுரை கலெக்டரும் ஏற்று கொண்டு உள்ளார். பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க கூடாது. மத ரீதியிலான பதட்டங்களை தணிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டும். எனவே இந்த வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி வழங்க கூடாது. கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டு பாரத் இந்து முன்னணியின் மனுவை தள்ளுபடி செய்தார்.
The post பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு தரும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க கூடாது: காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
