சென்னை: வடகிழக்கு பருவ மழை காலத்தின் இறுதியாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான புயல் சின்னம் படிப்படியாக வலுவிழந்து மன்னார் வளை குடா பகுதியில் காற்றழுத்த சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. பெரிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த புயல் சின்னம் வலுவிழந்தது ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
இருப்பினும், வட கிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக இருந்த நிலையில், குமரிக் கடல் பகுதியிலும், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சிகள் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரையில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட உயர்ந்து காணப்பட்டது.
கோவை மாவட்டம், சென்னை, மதுரை மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி, சென்னை, திருப்பத்தூர், மாவட்டத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிகரித்து காணப்பட்டது. கடலூர், சேலம் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே, இதுவரை தமிழகம், புதுச்சேரியில் நீடித்து வந்த வட கிழக்கு பருவமழை இன்னும் 3 நாளில் விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
