- பிரேமலதா
- சென்னை
- பொங்கல் திருவிழா
- கோயம்பேடு தே.மு.தி.க.
- தேமுதிக
- பொதுச்செயலர்
- பொருளாளர்
- எல்.கே.சுதீஷ்
- பார்த்தசாரதி
சென்னை: கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் பொங்கல் விழா நடந்தது. பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிரேமலதா பேசுகையில் கூறியதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்ம கட்சிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் இது ஒரு நல்ல பொங்கலாக அமையும்.
என்னமோ பேசினார்கள், கேப்டன் இல்லை, கட்சி அவ்வளவு தான், கூட்டம் கூடாது என்று சொன்னார்கள். பேசிய அத்தனை வாய்களும் அடைத்து நாங்கள் என்றைக்கும் கேப்டனுக்கும், தேமுதிகவும், அண்ணியாருக்கும், துணை நிற்போம் என்று சொல்லி வெற்றி வீரர்களாக வந்து கலந்துகொண்டீர்கள். அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. தேமுதிக ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது.
போகி பண்டிகை அனைவருடைய கஷ்டங்கள் நீங்கி பழைய பொருட்களை எரிப்பது போன்று இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை கேப்டன் வழியில் தேமுதிக இருக்கும்’’ என்றார். பிறகு பிரேமலதா நிருபர்களிடம் கூறுகையில், ‘தை பிறந்தால் வழி பிறக்கும். தேமுதிக நாட்டுக்கும், மக்களுக்கும் மகத்தான கூட்டணி நிச்சயமாக நாங்கள் அமைப்போம். திமுக கூட்டணியில் புதிதாக யாராவது இணைகிறார்களா ஆளுங்கட்சியே அறிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவில்லை. தை பிறந்தால் தமிழ்நாட்டில் நிறைய மாற்றங்கள் நிகழும்.
அந்த மாற்றங்கள் அந்த கூட்டணியை உறுதி செய்யும். அந்த உறுதி செய்யப்பட்ட கூட்டணி யார் என்பதை எங்கள் மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி நிருபர்களாகிய உங்களையும் அழைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். இன்னும் நேரம் இருக்கிறது. யார் யார் போட்டியிடுகிறார்கள்? எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பதை எல்லாம் இன்னும் நாம் முடிவு செய்து கூட்டணி முடிவு செய்த பிறகு தெரிவிப்போம்.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கோரிக்கை வைக்கிறார்கள். மாவட்ட செயலாளர் கூட அந்த கோரிக்கை வைத்திருக்கிறார். ஜனவரிக்கு உள்ளாக அனைத்து வேலைகளும் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நடக்கும் என்று நம்புகிறோம். இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு மறு பரிசீலனை செய்து கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
