×

மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜாய் கிரிசில்டாவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்திருந்த பிரதான வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. பாகசாலா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரங்கராஜுக்கு எதிரான பதிவுகளில், தேவையில்லாமல் தங்கள் நிறுவனத்தின் பெயரை இணைத்ததால் நிறுவனத்துக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பதிவுகளை நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வாதிட்டார்.

மேலும், தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை பதிவிட ஜாய் கிரிசில்டாவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதற்கு, ஜாய் கிரிசில்டா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபிகா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிடப்பட்ட பதிவுகளை இரண்டு வாரங்களில் நீக்கி விடுவதாக உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தார். மேலும், இருவருக்கும் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தரை நியமிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது மூத்த வழக்கறிஞர் பெயரை பரிந்துரைக்குமாறு இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதி, ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Joy Grisilda ,Madampatti Bagasala Company ,Chennai ,Madampatti Rangaraj ,Madras High Court ,Joy Grisilda… ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...