×

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உண்டா, இல்லையா?: அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

பிரயாக்ராஜ்: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி பிரசாந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இளம்பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது 19 வார கர்ப்பிணியாக உள்ளார் என்றும், மைனர் சிறுமியான அவர் குழந்தையை பெற்று வளர்க்கும் பக்குவத்தில் இல்லை என்றும் வாதிட்டார். பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பமானது மனுதாரருக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் அவர் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமடைந்த பெண்ணின் கருவை கலைக்கவிடாமல் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள வைப்பது என்பது அந்த பெண்ணின் அடிப்படை மனித உரிமையையும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையையும் மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலியல் வன்கொடுமையால் உருவான குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா? அல்லது கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா? என முடிவு செய்யும் உரிமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மருத்துவ கருத்தரிப்பு சட்டம் பிரிவு 3(2)-ன் படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவருக்கு மருத்துவரீதியாக கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது என்று கூறிய நீதிபதிகள் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

The post பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உண்டா, இல்லையா?: அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Allahabad High Court ,Prayagraj ,Allahabad court ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...