கட்டாக்: ரஞ்சி கோப்பை வரலாற்றில் 2வது அதிகபட்ச சேஸிங் சாதனையை சர்வீசஸ் கிரிக்கெட் அணி அரங்கேற்றி உள்ளது. கட்டாக் நகரில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் சர்வீசஸ் – ஒடிசா அணிகள் மோதின. முதலில் ஆடிய சர்வீசஸ் அணி 199 ரன் எடுத்தது. ஒடிசா முதல் இன்னிங்சில் 180 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சில் அபாரமாக ஆடிய ஒடிசா, 394 ரன்களை குவித்தது. இதையடுத்து, 376 ரன் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அந்த இலக்கை துரத்திப் பிடிக்கும் அசகாய முயற்சியில் சர்வீசஸ் அணியின் துவக்க வீரர்கள் சுபம் ரோஹில்லா, சுராஜ் வஷிஸ்ட் இறங்கினர். 85.4 ஓவர்களை எதிர்கொண்ட அவ்விருவரும் ஆட்டமிழக்காமல் 376 ரன்களை குவித்து தம் அணியை அபார வெற்றி பெறச் செய்தனர். ஆட்ட முடிவில் சுபம் 209 ரன்னுடனும், வஷிஸ்ட் 154 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன் சேஸிங் சாதனையை சர்வீசஸ் அணி அரங்கேற்றி உள்ளது. அதேசமயம், கடைசி இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 376 ரன் குவித்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், கடந்தாண்டில் நடந்த போட்டியில் திரிபுரா அணிக்கு எதிராக ரயில்வேஸ் அணி 378 ரன்களை சேஸிங் செய்து வென்றது சாதனைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
The post ரஞ்சி வரலாற்றில் 2ம் முறை ரன் சேசிங்கில் புரட்சி சர்வீசஸ் அணி எழுச்சி: 10 விக்கெட் வித்தியாச வெற்றி appeared first on Dinakaran.
