கொடைக்கானல் : கொடைக்கானலில் தூண் பாறை மலைத்தொடர்களுக்கு இடையே வெண்பஞ்சு மேகங்கள் கடல் அலைபோல காட்சியளிக்கின்றன. இதனை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து மகிழ்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் `மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிவது வழக்கம். தற்போது குளிர் சீசன் நிலவிவரும் நிலையில் வார விடுமுறை மட்டுமன்றி இதர நாட்களிலும் சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இவர்கள் மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, தூண் பாறை, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை அழகை கண்டு மகிழ்கின்றனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலைகளில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.
இதில் தூண் பாறை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பசுமை போர்த்திய மலைத்தொடர்கள் இடையே வெண்பஞ்சு மேகங்கள் கடல் அலை போல தற்போது காட்சியளிக்கின்றன.
இந்த காட்சி சொர்க்கத்தில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துவதாக சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் தெரிவித்தனர். கொடைக்கானலில் காலை, மாலை நேரத்தில் கடும் குளிரும், பகல் நேரத்தில் வெப்பத்துடன் கலந்த இதமான சூழலும் நிலவுகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் கண்டு பிரமிப்பு வெண்பஞ்சு மேகங்களால் கவர்ந்திழுக்கும் ‘பாற்கடல்’ appeared first on Dinakaran.
