×

12 ஆண்டுக்கு பின் ரஞ்சி போட்டி ஆடுகிறார்; டெல்லி அணி கேப்டன் பதவியை நிராகரித்த விராட் கோஹ்லி

டெல்லி: நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததால் முன்னணி வீரர்கள் அனைவரும் கட்டாயம் ரஞ்சி போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதன்படி கேப்டன் ரோகித்சர்மா, ரிஷப் பன்ட், சுப்மன்கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சி போட்டியில் களம் இறங்கினர். இதேபோல் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லியும் ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக ஆட உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆப் சைடுக்கு வெளியே சென்ற பந்துகளை கவர் டிரைவ் அடிக்க முயன்று விராட் கோஹ்லி விக்கெட்டை இழந்ததால் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பார்முக்கு திரும்பும் வகையில் அவர் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட இருக்கிறார்.

கடந்த வாரம் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கழுத்து சுளுக்கு காரணமாக ஆட வில்லை. இந்நிலையில் வரும் 30ம் தேதி தொடங்க உள்ள ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக அவர் விளையாட இருக்கிறார். இதற்காக அவர் தற்போது மும்பையில் சஞ்சய் பங்கரின் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சஞ்சய் பங்கர் கோஹ்லிக்கு பேட்டிங் நுணுக்கங்களையும் ஆப் சைடு செல்லும் பந்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். இதனிடையே ரஞ்சி போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் பதவியை விராட் கோஹ்லி ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரிஷப் பன்ட், சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் பதவியை நிராகரித்தார். இதையடுத்து ஆயுஷ்படோனி தலைமையில் அந்த போட்டியில் களம் இறங்கிய டெல்லி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விராட் கோஹ்லியும் கேப்டன் பதவியை நிராகரித்துள்ளார். இதேபோல் கே.எல்.ராகுலும் கர்நாடக அணிக்காக ரஞ்சி போட்டியில் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 12 ஆண்டுக்கு பின் ரஞ்சி போட்டி ஆடுகிறார்; டெல்லி அணி கேப்டன் பதவியை நிராகரித்த விராட் கோஹ்லி appeared first on Dinakaran.

Tags : Ranji ,Virat Kohli ,Delhi ,India ,New Zealand ,Australia ,BCCI ,Rohit Sharma ,Rishabh Pant ,Shubman Gil ,Jaiswal… ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...