தண்டையார்பேட்டை: சென்னையில் குட்கா, மாவா, ஹான்ஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கென தனி குழு அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, வடக்கு கடற்கரை காவல் உதவி ஆணையர் ராஜசேகர் தலைமையில் வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினம் மண்ணடி லிங்கி செட்டி தெரு மற்றும் போஸ்ட் ஆபீஸ் தெரு சந்திப்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இருவரை பிடித்து, அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் இருந்தன.
விசாரணையில், வியாசர்பாடி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (55), வியாசர்பாடி பி.வி.காலனி 1வது தெருவை சேர்ந்த வேல்முருகன் (31) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1300 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து இவர்கள் எங்கிருந்து இவற்றை கடத்தி வந்தனர். இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மண்ணடியில் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.