×

எல்கேஜி மாணவி பலியான விவகாரம் பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 3 பெண்கள் அதிரடி கைது: வகுப்பாசிரியை சிறையில் அடைப்பு

விக்கிரவாண்டி: பள்ளியில் எல்கேஜி மாணவி பலியான விவகாரத்தில் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வகுப்பாசிரியை சிறையில் அடைக்கப்பட்டார். விக்கிரவாண்டி பழைய காவல் நிலைய தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (34). திண்டிவனம் தாலுகா ஆபீசில் இசேவை மைய ஆப்ரேட்டராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களின் மூத்த மகள் லியா லட்சுமி (3), செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்தார். நேற்று முன்தினம் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து லியா லட்சுமி பலியானார்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குபதிந்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் மாணவியின் உடலை நேற்று காலை 8.15 மணி முதல் 9.30 மணி வரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கீதாஞ்சலி தலைமையிலான 3 பேர்குழுவினர் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மாணவியின் உடல், அவரது பெரியப்பா ஞானவேலிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் பள்ளி தாளாளர் எமில்டா மற்றும் பள்ளி முதல்வர் டோமினிக் மேரி ஆகியோர் உயர் ரத்தஅழுத்தம் காரணமாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆசிரியை ஏஞ்சலை, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 10ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மாணவியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.

இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மாணவியின் வீட்டிற்கு அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின், முதல்வர் அறிவித்த ரூ.3 லட்சத்திற்கான காசோலையை மாணவியின் தாயிடம் வழங்கி ஆறுதல் கூறினர். அப்போது அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினரும் நேற்று அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

The post எல்கேஜி மாணவி பலியான விவகாரம் பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 3 பெண்கள் அதிரடி கைது: வகுப்பாசிரியை சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : LKG ,Vikravandi ,Palanivel ,Vikravandi Old Police Station Street ,Tindivanam Taluka Office ,Dinakaran ,
× RELATED பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து 3...