×

மின்னல் வேகத்தால் பறிபோன உயிர் எடப்பாடியுடன் சென்ற கார் மோதி காவலாளி பலி: அதிமுக ஒன்றிய சேர்மனிடம் விசாரணை

சேலம்: எடப்பாடி பழனிசாமியின் காருக்கு பின்னால் சென்ற அதிமுக சேர்மன் கார், டூவீலர் மீது மோதி காவலாளி பலியானார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒன்றிய சேர்மனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன். அதிமுக ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். கடந்த 18ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆத்தூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு காரில் சென்றார்.

அவரது காரின் பின்னால், பல கார்கள் மின்னல் வேகத்தில் சென்றன. பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெகநாதனும் காரில் சென்றார். அவர் சென்றது பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு சொந்தமான அரசு காராகும். காரிப்பட்டி அருகே மின்னாம்பள்ளி பக்கம் மின்னல்வேகத்தில் சென்றபோது, அவ்வழியாக டூவீலரில் வந்த தனியார் பாலிடெக்னிக்கின் காவலாளி தங்கவேல் மீது ஜெகநாதன் கார் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காவலாளி உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் ஜெகநாதனின் கார் டிரைவர் அண்ணாதுரை மீது வழக்கு பதிவு செய்தனர். அரசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கலெக்டரின் அனுமதி இல்லாமல் அரசு காரை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிக்கு சென்ற காரணத்தால், ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கார் செல்கிறது. அதற்கு பின்னால் 4 கார்கள் செல்லும் நிலையில் சற்று இடைவெளியிட்டு ஜெகநாதன் செல்லும் காரும் வேகமாக செல்கிறது. மின்னல் வேகத்தில் சென்ற அந்த கார் ரோட்டை கடக்கும் டூவீலர் மீது மோதி தூக்கி வீசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இவை நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக இருக்கிறது. விபத்து நடந்ததும் அந்த இடத்திற்கு பொதுமக்கள் பதற்றத்துடன் ஓடிவரும் காட்சியும் இருக்கிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்து குறித்து பனமரத்துப்பட்டி பிடிஓ விசாரணை நடத்தி கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதன்மீது கலெக்டர் தான் நடவடிக்கை எடுப்பார்’ என்றனர்.

The post மின்னல் வேகத்தால் பறிபோன உயிர் எடப்பாடியுடன் சென்ற கார் மோதி காவலாளி பலி: அதிமுக ஒன்றிய சேர்மனிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : High Court of Justice ,Salem ,Edapadi Palanisami ,EU Chamber ,Salem District ,Panamarathupati ,Supreme Union Corps ,Dinakaran ,
× RELATED தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர்...