×

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு ரூ.14 கோடி கொக்கைன் போதைப்பொருளை மாத்திரையாக விழுங்கி கடத்தி வந்த பெண்

சென்னை: எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கென்யா நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர், ரூ. 14 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மாத்திரையாக விழுங்கி கடத்தி வந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அதே விமானத்தில் கென்யா நாட்டை சேர்ந்த சுமார் 35 வயது பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதோடு பெண் சுங்க அதிகாரிகள், அவரை முழுமையாக பரிசோதித்தபோது, அவருடைய வயிறு வழக்கத்துக்கு மாறாக பெரிதாக இருப்பது தெரியவந்ததை அடுத்து அந்த பெண் பயணியை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று, எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் அதிகஅளவிலான மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அப்பெண் பயணியை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மருத்துவர்களின் உதவியுடன் எனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருக்கும் மாத்திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் எடுத்தனர்.

அவ்வாறு அவரது வயிற்றுக்குள் இருந்து மொத்தம் 90 மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டன. அதன் பின்பு அந்த மாத்திரைகளை பரிசோதித்தபோது அது கொக்கைன் போதைப் பொருள் அடைக்கப்பட்ட கேப்சூல்கள் என தெரியவந்தது. 90 கேப்சூல்களிலும் மொத்தம் 1.24 கிலோ கொக்கைன் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.14.2 கோடி. இதைத்தொடர்ந்து சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயணியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.14.2 கோடி மதிப்புடைய கொக்கைன் போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர்.

சுங்க அதிகாரிகள் அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலில் போதை கடத்தல் குருவியாக பணியில் இருப்பதாகவும், அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் ஏற்கனவே இதேபோல் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சில முறை வந்து சென்றதும் தெரியவந்தது. இந்த கென்யா பெண் சென்னையில் யாரிடம் இந்த போதைப்பொருளை கொடுக்க வந்தார், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள், சென்னையில் யார் யார் இருக்கிறார்கள் என சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு ரூ.14 கோடி கொக்கைன் போதைப்பொருளை மாத்திரையாக விழுங்கி கடத்தி வந்த பெண் appeared first on Dinakaran.

Tags : Ethiopia ,Chennai ,Addis Ababa ,
× RELATED எத்தியோப்பியாவில் ஆற்றில் லாரி கவிழ்ந்து 66 பேர் பலி