×

வாய்க்கால் பாசனத்தை நம்பி இருப்போர் பணிகளை துவங்குவதில் சிக்கல் குரும்பூர் பகுதியில் பிசான சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

உடன்குடி : தாமிரபரணி தண்ணீர் வராததால் வாய்க்கால் பாசனத்தை நம்பி இருப்போர் வேளாண் பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குரும்பூர் பகுதியில் பிசான சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் 8 அணைகள் உள்ளன.

இவை கீழ் தாமிரபரணி, மேல்தாமிரபரணி என பிரிக்கப்பட்டு மேல் தாமிரபரணியில் 6 அணைகளும், கீழ் தாமிரபரணியில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைகளும் இடம்பெற்றுள்ளன.

கீழ்தாமிரபரணி கோரம்பள்ளம் டிவிஷனில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 53 குளங்கள் உள்ளன. கோரம்பள்ளம் வடிநில கோட்டம் ஆறு பாசனம் இல்லாமல் மழை வெள்ளத்தால் நிரம்பும் குளங்களுக்கான அலுவலகம்தான். ஆனால் தற்போது கீழ்தாமிரபரணியை கோரம்பள்ளம் வடிநில கோட்டத்தில் இணைத்து இருக்கின்றனர்.

தற்போது பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் தென்காலில் குறைந்தளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் மூலம் கடம்பா, நல்லூர், நத்தகுளம், ஆவுடையார்குளம், சினுமாவடி, கானம் உள்பட 13 குளங்கள் நிரம்ப வேண்டியுள்ளது.

இதன் மூலம் 12,100 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், குளத்துநீர் பாசனம் மூலமும் பயன்பெறுகின்றன. தற்போது கால்வாயில் குறைந்தளவு தண்ணீரே வருவதால் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்பவர்கள் மட்டுமே முன்கூட்டியே நடவு செய்துள்ளனர். ஆனால் வாய்க்கால் பாசனம் மூலம் பயிர் செய்பவர்களில், வாய்க்காலை ஒட்டிய பகுதியில் இருப்பவர்கள் பணியை ஆரம்பித்துள்ளனர். மற்றவர்கள் இன்னும் பணிகளை தொடங்கவில்லை.

எனவே வாய்க்கால் பாசனத்தில் பயன்பெறும் விவசாயிகள், வேளாண் பணிகளை தொடங்கும் வகையில் தென்கால் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் கல்லை சிந்தா கூறுகையில், ‘நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்ட கீழ் தாமிரபரணியில் கீழ் மருதூர் மேலகால், கீழகால், ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் உள்ளது.

வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்தால் மட்டுமே நிறைவான தண்ணீர் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கிடைக்கும். ஆனால் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பாளையங்கோட்டை வடிநிலக்கோட்டம் அலுவலகம் இருக்கும்போது சமமாக தண்ணீர் பங்கிடப்பட்டு வந்தது. ஆனால் நிர்வாக காரணங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் அணைகள் அனைத்தும் நெல்லையில் மாவட்டத்தில் இருப்பதால் தண்ணீர் கேட்டு கெஞ்சும் நிலைதான் உள்ளது’ என்றார்.

The post வாய்க்கால் பாசனத்தை நம்பி இருப்போர் பணிகளை துவங்குவதில் சிக்கல் குரும்பூர் பகுதியில் பிசான சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kurumpur ,Ebenkudi ,Tamiraparani ,Thamirabharani ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...