திருப்பூர்: தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சார்பில் தேர்தல் பணியாற்றிட கட்சி அலுவலகங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே நிர்வாகிகள் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருகிறது. அதாவது, விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வந்தவர்களுக்கும், தவெக விசுவாசிகளுக்கும் பதவிகள் வழங்கப்படும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
ஆனால், எந்த ஒரு பணியும் செய்யாமல் இருப்பவர்களுக்கு பணம் வாங்கி கொண்டு ஜாதி, மதம் பார்த்து பதவி வழங்குவதாக தவெகவினர் குற்றச்சாட்டி வருகின்றன. இந்த பிரச்னை தொடர்பாக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த அஜிதாவுக்கு மாவட்ட செயலாளர் பதவியை வழங்காமல் வேறு ஒருவருக்கு வழங்கியதால் அவர் விஜய் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
பின்னர், வீட்டில் தற்கொலைக்கும் முயன்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்து உள்ளது. திருச்சியில் தேர்தலில் போட்டியிட ரூ.10 கோடி மாவட்ட செயலாளர் கேட்பதாக விஜய்க்கே நிர்வாகிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் நகர தவெக அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதனை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் திறந்து வைக்க வந்தார். அப்போது வெள்ளகோவில் பகுதிக்கு ஈரோடு மற்றும் தாராபுரம் பகுதியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதை கண்டித்தும், தவெக மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களுக்கு பதவி வழங்கக்கோரியும் தவெக நிர்வாகிகள் ஒரு தரப்பினர் செங்கோட்டையனை காரை முற்றகையிட்டு அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து அவர்களிடம் கோபியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வாருங்கள். அங்கு வைத்து பேசிக்கொள்ளலாம் என செங்கோட்டையன் கூறினார். ஆனால் செங்கோட்டையன் பேச்சை யாரும் கேட்கவில்லை.
தொடர்ந்து ஒருபுறம் வாழ்க கோஷமும், மற்றொரு புறம் எதிர்ப்பு கோஷமும் எழுந்ததால் செங்கோட்டையன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் முற்றுகையாளர்களிடமிருந்து அவசர அவசரமாக செங்கோட்டையன் வெளியேறி கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
* ‘எடப்பாடி தடுத்தாலும் நடப்பது நடக்கும் கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்’
செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘செல்லூர் ராஜூ சொல்வது உண்மை என்றால் 2021 சட்டமன்ற தேர்தலில் எதற்காக தோல்வியுற்றார். 10 தேர்தலில் ஏன் தொடர் தோல்வியடைந்தார். ஓபிஎஸ், டிடிவி, கூட்டணிக்கு வருவதை எவ்வளவுதான் எடப்பாடி அழைத்தாலும் தடுத்தாலும் நடப்பது நடக்கும். ஏனென்றால் சூழ்நிலை வேறு மக்களின் மனநிலை வேறு. ராமதாஸையும், அன்புமணியையும் ஒன்று சேர்ப்பதாக ஜான் பாண்டியன் கூறியுள்ளது, அவருடைய கருத்து ஆகும்’’ என்றார்.
