சேலம்: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.
14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, கடந்தாண்டு ஏப்ரல் 8ம் தேதி ரூ.50 அதிகரிக்கப்பட்டு, டெல்லியில் ரூ.853, மும்பையில் ரூ.852.50, கொல்கத்தாவில் ரூ.879, சென்னையில் ரூ.868.50, சேலத்தில் ரூ.886.50 என நிர்ணயிக்கப்பட்டது. இவ்விலையில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
அதே போல், நேற்று அதிகாலை வெளியான நடப்பு மாதத்திற்கான (ஜனவரி) விலை பட்டியலில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், அதே விலையில் நீடிக்க செய்துள்ளனர். அதே வேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.110 முதல் ரூ.112 வரை அதிகரித்துள்ளனர். சென்னையில் கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,739.50 என இருந்த நிலையில், ரூ.110 அதிகரித்து ரூ.1,849.50 ஆகவும், சேலத்தில் ரூ.1,689ல் இருந்து ரூ.1,799 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ரூ.111 அதிகரித்து ரூ.1,691.50 ஆகவும், மும்பையில் ரூ.111 அதிகரித்து ரூ.1,642.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.111 அதிகரித்து ரூ.1,795 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு நாளில் வணிகர்கள் பெருமளவு பாதிக்கும் வகையில், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.110 அதிகரித்திருக்கிறது.
கடந்த அக்டோபரில் ரூ.16ம், நவம்பரில் ரூ.4.50ம், டிசம்பரில் ரூ.10.50ம் விலை குறைந்த நிலையில், நடப்பாண்டின் முதல் மாதமான ஜனவரியில், திடீரென ரூ.110 விலையை அதிகரித்திருப்பது வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களின் தலையில் இறக்கிய இடியாக அமைந்திருப்பதாக வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வால், ஓட்டல், டீக்கடை, பேக்கரி நடத்துவோருக்கு எரிபொருளுக்கான செலவினம் அதிகரிக்கிறது. இதனால், உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை நடப்பு மாதம் மாற்றம் செய்யவில்லை என்பது இல்லதரசிகளுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது. நடப்பு மாதம் முழுவதும் இவ்விலையில் தான், வர்த்தக சிலிண்டர் விற்கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
