×

எஸ்டிபிஐ யாருடன் கூட்டணி? நெல்லை முபாரக் பதில்

நெல்லை: நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் பாக முகவர்கள் மாநாடு கொக்கிரகுளத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி: கடந்த தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ அங்கம் வகித்த நிலையில் அக்கட்சி பாஜவுடன் கூட்டணி வைத்து கொண்டதால் கூட்டணியில் இருந்து விலகியது. சட்டமன்ற ேதர்தலில் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது இல்லை.

நெல்லையில் பொருநை அருட்காட்சியகம் அமைத்ததற்கும், காயிதே மில்லத் பெயரில் நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டியதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பொதுமக்கள் மீண்டும் இணைக்க வருபவர்கள் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர். 12 லட்சம் வாக்காளர்களை சந்தேக வாக்காளர்களாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

பட்டியலில் இருக்கும் வாக்காளர்களை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. பாஜவுக்கு தமிழகத்தில் பெரிய கட்டமைப்பு ஒன்றும் இல்லை. அவர்கள் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தி கட்டமைப்பு உள்ளதாக காட்டுகின்றனர். பெரியார், அண்ணாவால் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்ற முடியாது.

மதத்தின் பெயரால் தமிழக மக்களை பிரிக்க முடியாது. இதில் மக்கள் தெளிவாக உள்ளனர். ஒன்றிய அரசு, தமிழக மக்களை பெரிய அளவில் வஞ்சித்து வருகிறது. தமிழகம் என்றாலே ஒன்றிய அரசுக்கு வேப்பங்காய்போல் கசக்கிறது. ஜனவரி 20ம் தேதி தேசிய பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : STBI ,Nellai Mubarak ,Nellai ,agents' ,Kokkrakulam ,president ,AIADMK ,BJP ,
× RELATED திட்டமிட்ட சிறப்பான...