மதுரை: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குண்டர் தடுப்பு சட்ட கைது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: சிறுமியை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக எனது சகோதரர் மீது வழக்கு பதிந்து தஞ்சாவூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
எனது சகோதரர் மீது இந்த வழக்கு தவிர வேறு வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லை. எனவே, ஒரே ஒரு வழக்கின் அடிப்படையில் அவர் மீது எடுக்கப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் இளந்திரையன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 35 நாட்களுக்குப் பிறகு குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு பாய்ந்துள்ளது. எனவே, போலீசார் மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘வழக்கில் கைது செய்யப்பட்டவர், 8 வயது சிறுமி மீது பாலியல் ரீதியிலான குற்றம் புரிந்துள்ளார். இதனை தனிப்பட்ட குற்றமாக கருத முடியாது.
பாலியல் குற்றம் சமூகத்திற்கு எதிரானது என்பதுடன், தீவிரமான மற்றும் கொடூரமானதாகும். பாலியல் வழக்கில் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் கூட, யாரையும் குண்டர் சட்டத்தில் கைது ெசய்யும் உத்தரவை பிறப்பிக்க சட்டத்தில் இடம் உண்டு. இதனுடன், குண்டர் தடுப்பு சட்ட உத்தரவினை, ஒரு குற்றம் நடந்த பின் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பிறப்பிக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
