திருச்சி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று திருச்சி வருகை தருகிறார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். அவரது நடைபயணம் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று (2ம் தேதி) காலை 9.30 மணிக்கு திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை துவக்கி வைத்து பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் வரை சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விழா மேடை அமைப்பு மற்றும் நடைபயண ஏற்பாடு பணிகளை மதிமுக முதன்மை செயலாளர் துரை.வைகோ எம்பி செய்து வருகிறார். நேற்று காலை திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழா மேடையை பார்வையிட்டார்.
* ‘சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் மக்களை நிர்மூலமாக்கும் முயற்சி’
வைகோ திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆலயங்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல, வைணவ சமயத்தினருக்கும், சைவ சமயத்தினருக்கும், பகுத்தறிவு கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அவர்கள் நம்பிக்கையை மதித்து நடந்து வருகிறோம். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் மக்களை நிர்மூலமாக்கும் முயற்சியாக வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதும், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலில் இந்துத்துவா சக்திகள் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று தற்போது சாதிய மோதல்கள் மத மோதல்களை தமிழ்நாட்டில் உருவாக்க சிலர் பார்க்கிறார்கள்.
அதை தடுப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோதரர்களாக ஒருவருக்கொருவர் இனக்கமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முழுமையாக வலியுறுத்தி, நாளைய தினம் (இன்று) திருச்சியில் இருந்து நடை பயணத்தை தொடங்கவுள்ளேன். இப்பயணத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தையும் மேற்கொள்வேன். தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இந்நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
