×
Saravana Stores

10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரிப்பு; தமிழ்நாட்டின் மின்தேவை 2026-27ல் 23,013 மெகாவாட்டாக அதிகரிக்கும்: மத்திய மின்சார ஆணைய ஆய்வில் தகவல்


தமிழ்நாட்டின் மின் தேவை 2026 – 27ம் ஆண்டில் 23,013 மெகா வாட்டாக அதிகரிக்கும் என்று மத்திய மின்சார ஆணைய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. மேலும் நுகர்வோருக்கான சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய மின் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4 கோடி அளவில் உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் மின் நுகர்வோர் அதிகளவில் உள்ளனர், மாநிலத்தின் மின்சார பயன்பாடும் அதிகமாக இருக்கிறது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வணிகம் பெருகி வருவதால் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினமும் மின்சார நுகர்வு சராசரியாக 15,000 மெகா வாட்டாக உள்ளது. கோடைக்காலத்தில் வீடு, அலுவலகங்களில், குளிர்சாதன பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், அந்த காலத்தில் மின் தேவை உச்ச அளவை எட்டுகிறது. கடந்த மே 2ம் தேதி மின்நுகர்வு எப்போதும் இல்லாத வகையில், 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. உச்ச கட்ட மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக மின்வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.

இந்நிலையில் மத்திய மின்சார ஆணையத்தின் 20வது மின்சார ஆய்வு அறிக்கையின்படி, 2026 – 27ம் ஆண்டில் தமிழ்நாட்டின் உச்ச மின் தேவை 23,013 மெகா வாட்டாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, சீராக மின் வினியோகம் செய்வதற்கு, கூடுதல் மின் வழித்தடங்களை ஏற்படுத்த மத்திய மின்சார ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக கர்நாடகா 20,066 மெகாவாட், ஆந்திரா 16,262 மெகாவாட்டாக உள்ளது. இனி மின் நுகர்வை பூர்த்தி செய்வதில், சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும். எனவே, அதிகரிக்க உள்ள மின் நுகர்வை பூர்த்தி செய்யவும், கூடுதல் மின் வழித்தடங்கள் அமைக்குமாறு மாநிலங்களின் மின் வாரியங்களுக்கு மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகமாக இருந்தால் எப்படி நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருக்கிறது என கூறப்படுகிறதோ, அதேபோல் மின்சார பயன்பாடும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அளவீடுகளில் ஒன்று. மின்சார பயன்பாடு அதிகரிப்பதைக் கவனத்தில் கொண்டு தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கட்டுமான துறை வேகமாக வளர்ந்து வருவதால் வீடு மற்றும் வணிக இடங்கள் அதிகரித்துள்ளது, இந்த 2 பிரிவுகளில் மாநிலத்தின் மொத்த மின்சார பயன்பாட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கிறது.வீட்டு மற்றும் வணிக இடங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விரிவடையும் போது மின்சார தேவை மேலும் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 2016 – 17ம் ஆண்டில் உச்ச மின் தேவை 14,823 மெகா வாட்டாகவும், 2021 – 22ம் ஆண்டில், 16,891 மெகா வாட்டாகவும் இருந்தது. இது 2026 – 27ம் ஆண்டு 23,013 மெகா வாட்டாக அதிகரிக்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், கூடுதலாக 8,190 மெகா வாட் அதிகரித்துள்ளது, இது 50 சதவீதம் அதிகம். தென்மாநில மின் தொகுப்பு, தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஒரு மாநிலத்தில் மின் தேவை எவ்வளவு அதிகரித்தாலும், அதை பூர்த்தி செய்வதற்கான மின்சாரம் கிடைக்கும். அதிகரிக்கும் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யத் தமிழ்நாடு அரசு பசுமை ஆற்றல் வாயிலாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. இதில் முக்கியமாக சூரிய சக்தி, காற்றாலை போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வழிகளை அதிகம் சார்ந்து இருக்கும் நிலையை மின் வாரியம் உருவாக்கி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

அதிகரிக்கும் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யத் தமிழ்நாடு அரசு பசுமை ஆற்றல் வாயிலாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது.

The post 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரிப்பு; தமிழ்நாட்டின் மின்தேவை 2026-27ல் 23,013 மெகாவாட்டாக அதிகரிக்கும்: மத்திய மின்சார ஆணைய ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Central Electricity Authority ,Central Electricity Commission ,Electricity board ,Tamil Nadu Power Board ,Dinakaran ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...