×
Saravana Stores

கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு: முகூர்த்த நாளை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை சற்று உயர்வு

சென்னை: வட மாநிலங்களில் அறுவடை காலம் முடிந்ததால், கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. மேலும், முகூர்த்த நாளை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினசரி 60 வாகனங்களில் இருந்து 1300 டன் வரை வெங்காயம் வருவது வழக்கம். இந்நிலையில், திடீரென வரத்து குறைவு காரணமாக நேற்று 20 வாகனங்களில் இருந்து 500 டன் குறைவான நாசிக் வெங்காயம் வந்ததால் கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் நேற்றுமுதல் ரூ 60 இருந்து ரூ100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேப்போல், சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மற்ற அனைத்து காய்கறிகளின் விலை பட்டியல் பின்வருமாறு: ஒரு கிலோ தக்காளி, பாவக்காய் ரூ35க்கும், உருளைக்கிழங்கு காராமணி சுரக்காய் முருங்கைக்காய் காலிபிளவர் ரூ40க்கும், சின்ன வெங்காயம் ரூ70க்கும், கேரட்,கொத்தவரங்காய், பச்சை மிளகாய் ரூ60க்கும், பீன்ஸ், சவ்சவ், சேமகிழங்கு, பீர்க்கங்காய் நூக்கல் ரூ50க்கும், கத்திரிக்காய் ரூ25க்கும், இஞ்சி ரூ180க்கும், பூண்டு ரூ380 க்கும், எலுமிச்சை பழம் ரூ90க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.. எஸ் முத்துகுமார் கூறுகையில், வட மாநிலங்களில் அறுவடை காலம் முடிந்ததால் நாசிக் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. தமிழக அரசு கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தை கொள்முதல் செய்வதால் இதன் விலை குறைய வாய்ப்பு உள்ளது என கூறினார்.

இதேபோன்று, முகூர்த்த நாள் இன்றும், நாளையும் என்பதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ700க்கும், ஐஸ் மல்லி ரூ600க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ300க்கும், கனகாம்பரம் ரூ 1,200க்கும், அரளி பூ ரூ200க்கும், சாமந்தி ரூ100க்கும், சம்பங்கி ரூ350க்கும் பன்னீர் ரோஸ் ரூ80க்கும், சாக்லேட் ரோஸ் ரூ120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. இதில், இன்றும், நாளையும் முகூர்த்த நாள் என்பதால் நேற்று காலை முதலே அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என கூறினார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு: முகூர்த்த நாளை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை சற்று உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Mugurtha day ,CHENNAI ,Koyambedu market ,Mugurtha ,
× RELATED கோயம்பேடு மார்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்