×
Saravana Stores

சென்னையில் வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்க சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம்: ஆய்வறிக்கை தகவல்

சென்னை: சென்னையில் வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்க சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிக்கரணை, பழவேற்காடு, எண்ணூர் ஆகிய இடங்களில் சதுப்பு நிலங்கள் அமைந்துள்ளன. நீரை மாசுபடுத்தும் அம்சங்கள், வண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் இயற்கை வடிகட்டியாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. ஆறுகள், ஏரிகள், சிறிய அளவிலான ஓடைகள் போன்றவற்றின் நீரை வறட்சிக் காலங்களில் பயன்படுத்தும் வகையில், ஒரு பஞ்சு போல உறிஞ்சி சேமித்து வைக்கும் ஒரு சூழலியல் அமைப்பாக இந்த சதுப்பு நிலங்கள் திகழ்கிறது.

பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் தளமாகவும், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கான இயற்கை வாழ்விடமாகவும் அவை செயல்படுகின்றன. இதன்மூலம், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றைத் தடுப்பதில் சதுப்பு நிலங்கள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கையாக அமைந்த, கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்புநிலப் பகுதிகளில் ஒன்று. அதன் கிழக்கு சுற்று எல்லை, பக்கிங்காம் கால்வாய், ராஜிவ்காந்தி சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக உள்ளது. தெற்கு, மேற்கு எல்லைகள் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களால் நிறைந்துள்ளன.

சுமார் 250 சதுர கி.மீ. அளவுக்கு பள்ளிக்கரணை சதுப்புநிலம் பரவியுள்ளது. அந்த சதுப்புநிலம், கண்ணாடி விரியன் எனப்படும் பாம்பு மற்றும் அரிவாள் மூக்கன், நீளவால் தாழைக்கோழி உள்ளிட்ட பறவைகள் போன்ற அழிந்துவரும் உயிரினங்களின் வாழ்விடமாக பள்ளிக்கரணை விளங்குகிறது. ஆனால், நகரமயமாக்கல் காரணமாக இந்த சதுப்பு நிலங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதால், காலநிலை மாற்றத்தால் வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், உலகளாவிய அமைப்புகள் அவ்வப்போது, காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, சமீபத்தில் உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்டுள்ள ‘தி லிவிங் பிளானட் 2024’ என்ற ஆய்வறிக்கையில், அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஐரோப்பா, வட அமெரிக்காவில் வானிலையின் போக்கு எப்படி மாறுகிறது என்பது குறித்து, உலகளவில் நேரிட்டுள்ள பல சூழலியல் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் சென்னை பெருநகரம் வேகமெடுக்கும் நகரமயமாதல் காரணமாக, அதன் சதுப்பு நிலப் பரப்பில் 85% பகுதியை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் சதுப்புநிலங்கள் குறைந்துள்ளதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்தும், நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பித்தல், வெள்ளத் தடுப்பு ஆகிய முக்கியமான இயற்கை செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடுகிறது. வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இருந்து காக்கும் சதுப்பு நிலங்களின் அழிவால் வெள்ள பாதிப்பு மற்றும் வறட்சி அதிகரித்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்யவும், தண்ணீரைத் தக்க வைக்கவும் சதுப்பு நிலங்கள் இல்லாத காரணத்தால், சென்னையின் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையால் குடிக்க, குளிக்க, சமைக்க என தங்கள் நீர்த்தேவையை லாரிகள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். எனவே, எஞ்சியிருக்கும் சதுப்பு நிலங்களை காக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை சுட்டுகிறது. மேலும், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு ‘‘தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மூலம் பள்ளிக்கரணை, பழவேற்காடு போன்ற பெரிய சதுப்பு நிலங்கள் மீதுதான் கவனம் செலுத்துகிறது.

நகராட்சி மற்றும் நீர்வளத்துறை இணைந்து இதற்காகப் பணியாற்றுகிறோம். மக்களும் இதற்கான ஒத்துழைப்பைத் தரவேண்டும். நீர்நிலை பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என பல உத்தரவுகள் உள்ளது. இதை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சென்னை மற்றும் புறநகரில் இருக்கும் ஏரிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது,’’ என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் குறித்த நிலவரை தொகுப்பை அரசு (வரைபடம்) உருவாக்க வேண்டும். அதன் எல்லைகளைத் தெளிவாக வரையறுத்து அங்கு யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்க வேண்டும். இதன்மூலம், சதுப்பு நிலம் குறித்த வரையறையை மக்கள் அறிந்து கொள்ள முடியும். சதுப்பு நிலங்களின் அழிவுக்கு அதில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளும், மக்களால் உருவாக்கப்படும் கழிவுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சதுப்பு நிலங்களின் பவுதீக எல்லை என்பது வேறு, அதன் சூழலியல் எல்லை என்பது வேறு. சூழலியல் எல்லை என்பது, சதுப்பு நிலத்தின் எல்லையையும் தாண்டியது. நீர்பிடிப்புப் பகுதி வரை சதுப்பு நிலத்தின் எல்லை உள்ளது. இதை மனதில் வைத்து அதன் எல்லையை வரையறுக்க வேண்டும். எனவே, ஆண்டுதோறும் வறட்சி மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களை காப்பாற்ற சதுப்பு நிலங்களை மீட்டு அரசு பாதுகாக்க வேண்டும்,’’ என்றனர்.

விரிவான அறிக்கை
கடந்த 1911ம் ஆண்டு வருவாய் ஆவணப் பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதைத் தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டுள்ளது.

மீட்டுருவாக்கம்
கடந்த 2019ம் ஆண்டு கோடையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர்நிலைகள் வறண்டதையும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சதுப்பு நில அழிவின் காரணமாக, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள சதுப்பு நிலங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

The post சென்னையில் வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்க சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம்: ஆய்வறிக்கை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pallikaranai ,Palavekadu ,Ennore ,
× RELATED பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு