×
Saravana Stores

சென்னையில் ரூ.98.21 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் ரூ.98.21 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 98.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணி, என மொத்தம் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக இருந்து, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது. சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைகேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், நிலவகைப்பாடுகளில் உபயோக மாற்றங்களை முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ஐந்து ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுப்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது குறித்த விவரங்கள்:

பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி
சென்னை, பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 4.61 ஏக்கர் பரப்பளவில் 23.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய இயற்கை எழிலுடன் கூடிய சுற்றுச்சூழல் குளம், பறவை கண்காணிப்பு கோபுரம், உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;

முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகேயுள்ள முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 2.40 ஏக்கர் பரப்பளவில் 20.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய பூங்கா, இப்பூங்காவில் செயல்திறன் பகுதி, பருவகாலத் தோட்டம், மழைத் தோட்டம் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;

அயனம்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி சென்னை, அயனம்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 4.26 ஏக்கர் பரப்பளவில் 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;

வேளச்சேரி ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி
சென்னை, வேளச்சேரி ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 1.91 ஏக்கர் பரப்பளவில் 19.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலாவும் தளம், படகு சவாரி, மகரந்த சேர்க்கை பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;

சீக்கனான் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி
செங்கல்பட்டு மாவட்டம், சீக்கனான் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் 9.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, யோகா பயிற்சி பகுதி, ஏரியை பார்வையிடும் பகுதி என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;

வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணிகள்
சென்னை, வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் விதமாக 2.14 ஏக்கர் பரப்பளவில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய பூங்கா, இப்பூங்காவில் இயற்கை நடைபாதை, பசுமை பூங்கா, புல்வெளி, சிறுவர் விளையாட்டுத் திடல், சுவர் ஓவியங்கள், சிற்பங்கள், உடற்பயிற்சி இயந்திரங்கள் என பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள்;

என மொத்தம் 98.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் ரூ.98.21 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Chennai Metropolitan Development Corporation ,Department of Housing and Urban Development ,Dinakaran ,
× RELATED மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்