×
Saravana Stores

தமிழ்நாடு முழுவதும் ஐடிஐக்களில் மாணவர் சேர்க்கை அக்.30ம் தேதி வரை நீட்டிப்பு

நெல்லை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ஐடிஐக்களில்) மாணவர்கள் நேரடி சேர்க்கை வரும் அக். 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்வதற்கான கால அளவு மாணவர்களின் நலன் கருதி கடந்த வாரம் வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி வரும் 30ம் தேதி மாணவர்கள் சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். கடந்த ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 85 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு முழுவதும் ஐடிஐக்களில் மாணவர் சேர்க்கை அக்.30ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nella ,Dinakaran ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...