- வாய்க்காய் அணை பூங்கா
- ஆண்டிப்பட்டி
- வைகை அணை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேனி மாவட்டம்
- வைகை அணை பூங்கா
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர்.
ஆண்டிபட்டி பகுதியில் நேற்று வெயில் கொளுத்திய போதும், அணை பகுதியை பார்வையிட ஏராளமானோர் வருகை தந்தனர். தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் பாலம் பகுதியில் பலர் நின்று அணையிலிருந்து தண்ணீர் வருவதைப் பார்த்து ரசித்தனர். பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஏறி விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் ரயிலில் குடும்பத்துடன் ஆர்வமாக பயணம் செய்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பூங்காவில் உள்ள புல்வெளிகளில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து கதைபேசி பொழுதைக் கழித்தனர். வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், காலை முதல் மாலை வரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர். அதிகமான மக்கள் கூட்டம் இருந்த நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும் விடுமுறை நாட்களில் தேனி, ஆண்டிபட்டியிலிருந்து கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கேட்டுக்கொண்டனர்.
The post வாரவிடுமுறையை கொண்டாட வைகை அணை பூங்காவில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.