ஆம்பூர்: குடியாத்தம் அருகே ரூ.14 ஆயிரம் கடன் தகராறில் நண்பனின் 2 மகன்களை கழுத்து நெரித்துக் கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் வடிவேல் நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி வினிதா. இவர்களது மகன்கள் யோகித் (6), தர்ஷன் (4). வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சிங்கல்பாடி அருகே உள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார் (25). நண்பர்களான யோகராஜூம் வசந்தகுமாரும் ஒன்றாக கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது.
இந்நிலையில் வசந்தகுமார், யோகராஜூக்கு ரூ.14 ஆயிரம் கடன் கொடுத்தாராம். ஆனால், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து கேட்டபோது, பணத்தை கொடுத்துவிட்டதாக யோகராஜ் கூறி உள்ளார். இதையறிந்த வசந்தகுமாரின் மனைவி சந்தியா, ‘உங்களது நண்பனிடம் கொடுத்த கடனை திரும்ப வாங்கவில்லையே’ என கணவரிடம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
இதனால் சந்தியா கோபித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனையில் இருந்த வசந்தகுமார் நேற்று முன்தினம் மாலை தனது பைக்கில் ஏரிப்பட்டியில் உள்ள யோகராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த வினிதாவிடம், உங்களது கணவர் யோகராஜ், மகன்களை அழைத்து வரச்சொன்னதாக கூறியுள்ளார். இதனை நம்பிய வினிதா, தனது மகன்களை வசந்தகுமாருடன் பைக்கில் அனுப்பியுள்ளார்.
இரவு நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வரவில்லை. பின்னர், வீட்டிற்கு தனியாக வந்த யோகராஜிடம், குழந்தைகள் குறித்து வினிதா கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த யோகராஜ், குழந்தைகளை காணவில்லை என ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், குழந்தைகளை அழைத்து சென்ற வசந்தகுமாரின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது சிங்கல்பாடியில் இருப்பது தெரியவந்தது.
அவரை தேடி போலீசார் மற்றும் யோகராஜ் ஆகியோர் சிங்கல்பாடி கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள சிங்கத்தம்மன் கோயில் அருகே சென்றபோது, வழியில் யோகித்தும், தர்ஷனும் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்த திருப்பத்தூர் எஸ்பி ஸ்ரேயா குப்தா மற்றும் போலீசார் நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, வசந்தகுமாரை தேடினர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த வசந்தகுமாரை நேற்று அதிகாலை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில், ‘யோகராஜ் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு திருப்பி தரவில்லை. இதனால் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மேலும், ஒரு நிகழ்ச்சியில் பணம் தொடர்பாக யோகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை அசிங்கப்படுத்தி விட்டனர். இந்த பிரச்னையால் எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரது 2 மகன்களை அழைத்து சென்று கொலை செய்தேன்’ என வசந்தகுமார் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து வசந்தகுமாரை கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கு பயன்படுத்திய வசந்தகுமாரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post ரூ.14 ஆயிரம் கடனுக்காக 2 சிறுவர்கள் கொலை: நண்பனின் மகன்களை தீர்த்துக்கட்டிய கட்டிட மேஸ்திரி கைது appeared first on Dinakaran.