வாலாஜாபாத், செப். 19: வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த மோகனா என்பவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது ஒரு பசு மாடு நேற்றுமுன்தினம் வழக்கம்போல் மேய்ச்சலுக்குச் சென்றன. அவை மாலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, மாட்டின் உரிமையாளர்கள் பல இடங்களில் தேடியும் மாடுகள் கிடைக்காததையடுத்து, நேற்று காலை மேய்ச்சல் பகுதியைச் சுற்றிலும் தேடினர். அப்போது, கட்டவாக்கத்தில் இருந்து ஊத்துக்காடு செல்லும் கூட்டு சாலையையொட்டி இயங்கும் ஒரு தனியார் தொழிற்சாலை அருகே உள்ள விவசாய நிலத்தில் 3 மாடுகளும் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வாலாஜாபாத் போலீசார் மாடுகள் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வாலாஜாபாத் கால்நடை மருத்துவர்கள் அங்கு வரவைக்கப்பட்டு இறந்து கிடந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு மாடுகள் இறப்புக்கான முழு காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது. அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நீரை அருந்தியதால் மாடுகள் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மேய்ச்சலுக்கு சென்றபோது ரசாயனம் கலந்த தண்ணீர் குடித்து 3 மாடுகள் சாவு? appeared first on Dinakaran.