- சட்டவாக்க சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு
- மாமல்லபுரத்தில்
- சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு
- காந்திராஜன்
- ஜனாதிபதி
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
மாமல்லபுரம், செப். 14: மாமல்லபுரம் பகுதிகளில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தது. பின்னர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அக்குழுவின் தலைவர் காந்திராஜன் வழங்கினார். மாமல்லபுரம் அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தனர். அப்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் முன் வைத்தனர். மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.
இங்கு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவின் தலைவர் எஸ்.காந்திராஜன் தலைமையில், குழுவின் உறுப்பினர்கள் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ திருமலைக்குமார், திருவாடானை எம்எல்ஏ ராம.கருமாணிக்கம், ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன், தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பி.ஆர்.பி.அருண்குமார், வேதாரண்யம் எம்எல்ஏ மா.சின்னதுரை, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ தி.சதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று நேரில் வந்து சங்கத்தின் செயல்பாடுகள், முறையாக விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறதா? போதிய அளவு உர மருந்து இருப்பில் உள்ளதா? வேப்பம் முத்துவை அரைத்து விவசாயிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு முறையாக வினியோகிக்கப்படுகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அப்போது, உர மருந்து தட்டுப்பாடு உள்ளது. வேப்பம் முத்துவை அரைக்கும் இயந்திரத்தை இயக்க போதிய ஆட்கள் இல்லை. இதனால், வேப்பம் புண்ணாக்கு வினியோகிப்பதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது. கறவை மாடுகள் பராமரிப்பு கடன் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 70 வயதை கடந்தவர்களுக்கு கடன் உதவி தர மறுக்கின்றனர். சென்ற ஆண்டு மழையில் அடித்துச் செல்லப்பட்ட வேர்க்கடலை பயிரிட்ட 6300 விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்காமல் உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதற்கு, கூட்டுறவு சங்க அதிகாரிகள் பதில் அளித்து கூறுகையில், ‘வேப்பம் முத்து கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. விருதுநகர், லால்குடி பகுதியில் வேப்பம் முத்து 1 கிலோ 40 ரூபாய்க்கு வாங்கி வந்து புண்ணாக்கு உற்பத்தி செய்கிறோம். செங்கல்பட்டு மாவட்டத்தில் இங்கு ஒரு இடத்தில் மட்டும் தான் வேப்பம் முத்து அரைக்கும் இயந்திரம் உள்ளது. இங்கு இருந்துதான் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு வினியோகம் செய்யப்படுகிறது. விரைவில், மதுராந்தகம் உள்ளிட்ட 3 கூட்டுறவு சங்கத்தில் இயந்திரம் நிறுவ மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தனியார் மூலம் வேப்பம் முத்துவை வாங்கினால், அதில், கரிசல் மண் கலந்து விடுகிறார்கள்.
அதில், எண்ணெய் சத்தும் இருக்காது. இதை விவசாயிகள் பயன்படுத்தும்போது எந்த புரயோஜனமும் இருக்காது. விரைவில், வேப்பம் முத்து தேவையென்று பேப்பரில் விளம்பரம் கொடுக்கப்பட்டு கொள்முதல் செய்து தங்கு தடையின்றி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இறுதியாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவின் தலைவர் எஸ்.காந்திராஜன் 9 மகளிர் குழுக்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹69 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் கடனுவிதவிகளை வழங்கினார். ஆய்வின்போது, சட்டபேரவை செயலாளர் சீனிவாசன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மாமல்லபுரம் பகுதிகளில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.