- சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு
- காஞ்சிபுரம் மாவட்டம்
- காஞ்சிபுரம்
- சட்டவாக்க மதிப்பீட்டுக் குழு
- தமிழ்நாடு சட்டமன்றம்
காஞ்சிபுரம், செப்.13: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். =காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவின் தலைவரும், வேடசந்தூர் எம்எல்ஏவுமான எஸ்.காந்திராஜன் தலைமையில், குழுவின் உறுப்பினர்கள் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பி.ஆர்.பி.அருண்குமார், சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன், திருவாடானை எம்எல்ஏ ராம.கருமாணிக்கம், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ தி.சதன் திருமலைக்குமார், கந்தர்வகோட்டை எம்எல்ஏ மா.சின்னதுரை, ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2024-2025ம் ஆண்டிற்கான மதிப்பீட்டு குழு, முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில், ஏகாம்பரநாதர் கோயிலில் ₹24.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, கோயில் திருப்பணிகளை பழமை மாறாமல் வடிவமடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
பின்னர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவின் தலைவர் எஸ்.காந்திராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் மாநகராட்சியில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் கட்டுமான பணி, அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் புதுப்பிக்கும் பணியினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு ராஜவீதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையினை ஆய்வு செய்து, ரேஷன் பொருட்களின் இருப்பு, பதிவேடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்தும் கேட்டறிந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இயங்கிவரும் நெல் இயந்திர நடவு மற்றும் உலர்களம் தரம் பிரித்தல் கூடத்தினை ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஐயம்பேட்டை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் வீடுகளை பார்வையிட்டு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், வாலாஜாபாத் பேரூராட்சியில் இயங்கிவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியில் ஆய்வினை மேற்கொண்டார். பின்பு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில், சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட திட்ட மேம்பாலம் கட்டும் பணியினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டு குழு தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து, சின்னகாஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவின் தலைவர் தலைமையில், மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தினை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 20 பயனாளிகளுக்கு ₹1.13 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரமும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ₹1,000 மதிப்பீட்டில் வேளாண் இடுப்பொருட்களுக்கான மானியமும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ₹7.41 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ₹1.78 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இடுப்பொருட்களுக்கான மானியமும், கூட்டுறவுத்துறை சார்பில் 45 பயனாளிகளுக்கு ₹147.32 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடன் உதவிகளும் என மொத்தம் 82 பயனாளிகளுக்கு ₹1.57 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவின் தலைவர் எஸ்.காந்திராஜன், மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கினார்.
அப்போது, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். ஆய்வின்போது கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சட்டமன்ற பேரவைக்குழுவின் முதன்மை செயலாளர் கி.சீனிவாசன், சட்டமன்ற பேரவைக்குழுவின் கூடுதல் செயலாளர் பா.சுப்பிரமணியம், சட்டமன்ற பேரவைக்குழுவின் துணை செயலாளர் சு.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் வே.நவேந்திரன், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெய, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு appeared first on Dinakaran.