கோபி: ஐபிஎஸ் மனைவியை விட்டுவிட்டு பெண் எஸ்ஐயுடன் ‘லிவிங் டுகெதர்’ பாணியில் வாழ்க்கை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி தனது வீட்டுக்கே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்க வந்த இன்ஸ்பெக்டருடனும் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபி கருமாயா வீதியை சேர்ந்தவர் மாதேஷ்வரன். இவர் பொது சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளராக வேலை செய்து ஓய்வுபெற்ற பின் சித்த மருத்துவராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் அருண் ரெங்கராஜன் (38). இவர் கடந்த 2012ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று சட்டீஸ்கர் மாநிலத்தில் பணிக்கு சேர்ந்தார்.
அப்போது அதே மாநிலத்தில் பணியாற்றிய இலக்கியா கருணாகரன் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இருவரும் கர்நாடகா மாநிலத்திற்கு பணியிட மாறுதலில் சென்றனர். அருண் ரெங்கராஜன் கலாபுர்கி மாவட்டத்தில் உள் பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றினார். அப்போது, அதே மாவட்டத்தில் பணியாற்றிய உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவும் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். அருண் ரெங்கராஜன், சுஜாதா இடையேயான பழக்கம் குறித்து கண்டப்பாவுக்கு தெரியவந்தது. எனவே அவர் இது பற்றி அருண் ரெங்கராஜனின் மனைவி இலக்கியா கருணாகரனிடம் கூறி உள்ளார்.
இதனால், அருண் ரெங்கராஜன் ஆத்திரமடைந்து கண்டப்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்டப்பா போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடகா மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அருண் ரெங்கராஜன் தார்வார் மாவட்ட உள் பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டார். அருண் ரெங்கராஜனுக்கும், பெண் உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, இலக்கியா கருணாகரன் குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்றார். அவர்களுக்கு விவாகரத்தும் ஆனது. தொடர் சர்ச்சையில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி அருண் ரெங்கராஜனுடன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து பெண் எஸ்ஐ சுஜாதாவும் தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். அப்போது அவர் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அருண் ரெங்கராஜன் மற்றும் சுஜாதா ஆகியோர் கோபிக்கு வந்தனர். பின்னர், இருவரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்றுள்ளனர். ரங்கம் கோயிலுக்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்து உள்ளனர். தொடர்ந்து கோபிக்கு வந்த இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அருண் ரெங்கராஜன் ஆத்திரமடைந்து சுஜாதாவை தாக்கினார்.
இதில் முகத்தில் காயமடைந்த சுஜாதா கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சுஜாதா அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த கோபி போலீசார், அருண் ரெங்கராஜனை கைது செய்தனர். நீதிபதி அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தார். இதற்கிடையே அருண் ரெங்கராஜனை கர்நாடக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்தது. அதைத்தொடர்ந்து அருண் ரெங்கராஜன் கோபி நஞ்சப்பா நகரில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த இரு நாட்களுக்கு முன் அவரது தற்காலிக பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஓரிரு நாளில் மீண்டும் பணியில் சேர இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்ஐ சுஜாதா கடந்த இரு நாட்களுக்கு முன் கோபியில் உள்ள அருண் ரெங்கராஜன் வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததில் இருந்தே இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அருண் ரெங்கராஜன், இரும்பு கம்பியால் சுஜாதாவை தாக்க முயன்றுள்ளார். இதனால், சுஜாதா வீட்டைவிட்டு வெளியே ஓடினார்.
தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த அருண் ரெங்கராஜன் வீட்டின் படுக்கை அறைக்கு தீ வைத்துவிட்டு உள்ளேயே இருந்துள்ளார். தீ மளமளவென பரவியது. வீட்டிற்குள் இருந்து புகை வெளியேறியது. தகவலறிந்து கோபி போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் படுக்கை அறையில் இருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்களும், முன் அறையில் இருந்த பெரிய எல்இடி டிவி உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து சேதமாகின. வீட்டிற்குள் இருந்த அருண் ரெங்கராஜன் மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து சுஜாதாவிடம் இன்ஸ்பெக்டர் காமராஜ் விசாரணை செய்தார். அப்போது, அங்கு இருந்த அருண் ரெங்கராஜன், இன்ஸ்பெக்டரிடமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் விசாரணைக்காக கோபி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஐபிஎஸ் மனைவியை விட்டுவிட்டு பெண் எஸ்ஐயுடன் ‘லிவிங் டுகெதர்’ தனது வீட்டுக்கே தீ வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி: மீட்க வந்த இன்ஸ்பெக்டருடன் தகராறு appeared first on Dinakaran.