* பியூட்டி பார்லரில் ஓ.சி. மேக்கப்புக்கு என்னா பில்டப்பு, சிக்க வைத்த மணமகனின் உறவினர், பரபரப்பு தகவல்கள்
நாகர்கோவில்: நாகர்கோவிலை சேர்ந்த வாலிபரை 2வதாக திருமணம் செய்ய சப் இன்ஸ்பெக்டராக நடித்த பெண் கைது செய்யப்பட்டார். பியூட்டி பார்லரில் ஓ.சி. மேக்கப் போட்டதால் சிக்கினார். தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அபி பிரபா (34). இவரது கணவர் முருகன். இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளான். குடும்ப தகராறு காரணமாக அபி பிரபா, கடந்த 6 வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்தார்.
சில காலம் ஊரில் தனியாக வசித்து வந்த அபி பிரபா, பின்னர் வேலைக்காக சென்னைக்கு சென்றார். சென்னை தி.நகரில் உள்ள ஜவுளி கடைகளில் சேலைகள் விற்பனை பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றினார். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்த்து வந்த பிரித்விராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. 3 மாதங்களுக்கு முன், இவர்கள் திருவனந்தபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு ரயிலில் சென்றிருந்தனர். அந்த பயணத்தின் போது அதே ரயிலில் பயணித்த நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த சிவா என்ற நபரின் அறிமுகம் அபி பிரபாவுக்கு கிடைத்தது. சிவா, சென்னையில் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார்.
ஒரு நாள் பழக்கத்தில் 2 பேரும் நெருக்கமாகினர். பின்னர் அபி பிரபாவும், சிவாவும் சென்னையில் அடிக்கடி சந்திக்க தொடங்கினர். இந்தநிலையில் சிவா வீட்டில் அவருக்கு பெண் தேடும் படலம் நடந்துள்ளது. காவல்துறையில் வேலை பார்க்கும் பெண் தான் வேண்டும் என்று சிவாவின் தாயார் கறாராக கூறினார். இது குறித்து அபி பிரபாவிடம், சிவா தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரும் இதுதொடர்பாக ஆலோசித்து, அபி பிரபா சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாக கூற முடிவு செய்தனர்.
அதன்படி சென்னையில் உள்ள நண்பர் ஒருவரின் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் உடையை வாங்கி அணிந்த அபி பிரபா வித, விதமாக போட்டோ, வீடியோ எடுத்தனர். அதை சிவாவின் தாயாரிடம் காட்டி, திருமணத்துக்கு சம்மதம் வாங்கினர். சிவாவின் தாயாரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தனது மருமகள் சப் இன்ஸ்பெக்டர் என பெருமையாக கூறி வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன் சிவா, அபி பிரபாவை அழைத்துக் கொண்டு நாகர்கோவில் வந்தார். ஊருக்கு வரும் போதே சப் இன்ஸ்பெக்டர் உடையில் தான் அபி பிரபா வந்தார். அபி பிரபாவை சப்-இன்ஸ்பெக்டர் உடையில் பார்த்ததும், சிவாவின் தாயாருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
தனது உறவினர்களுக்கும் போன் செய்து தகவல்களை பரிமாறினார். பின்னர் அதே பகுதியில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து சிவாவையும், அபி பிரபாவையும் தங்க வைத்தார். உறவினர்கள் வீட்டுக்கும் அழைத்து சென்றார். அபி பிரபாவும், காவல்துறை சீருடையுடன் மிடுக்கான தோற்றத்தில் வலம் வந்தார். இந்தநிலையில் சிவாவின் உறவினர் வெங்கடேஷ் என்பவரின் மனைவி, நாகர்கோவிலில் பியூட்டி பார்லர் வைத்துள்ளார். அந்த பியூட்டி பார்லருக்கு, தனது மருமகள் என கூறி அபி பிரபாவை சிவாவின் தாயார் அழைத்து சென்றார்.
அங்குள்ளவர்கள் விசாரித்த போது, அவர்களிடம் அபி பிரபா, தான் 2023 பேட்ஜ் என்றும், சென்னையில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றி விட்டு, தற்போது சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசில் இருப்பதாக கூறினார். திருமணத்துக்கு பின் வடசேரி காவல் நிலையத்துக்கே மாறி வந்து விடுவேன். அப்போது உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன் என பியூட்டி பார்லரிடம் இருந்தவர்களிடம் கூறினார்.
முகத்தில் உள்ள மருக்களை நீக்கி, பேஷியல் செய்த அபி பிரபா, பணம் எதுவும் கொடுக்காமல் சென்று விட்டார்.
பின்னர் கடந்த 30ம்தேதி மீண்டும் அதே பியூட்டி பார்லருக்கு அபி பிரபா சென்று பேஷியல் செய்ய வேண்டும் என கூறினார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பியூட்டி பார்லர் உரிமையாளர், அபி பிரபாவை செல்போனில் போட்டோ எடுத்து தனக்கு தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி இவர் 2023 பேட்ஜ் எஸ்.ஐ. தானா? என கேட்டு உள்ளார். அவர் தனக்கு தெரிந்த 2023 பேட்ஜ் எஸ்.ஐ.க்களிடம் அபி பிரபாவின் போட்டோவை அனுப்பி விசாரித்த போது, அபி பிரபாவின் குட்டு அம்பலமானது. அவர் எஸ்.ஐ. இல்லை என்பது தெரிந்ததும், நைசாக பேசி பியூட்டி பார்லரில் அவரை அமர வைத்து விட்டு வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
வடசேரி இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லருக்கு சென்று அபி பிரபாவிடம் விசாரித்தனர். ஒரிஜினல் போலீசை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அபி பிரபா, சிவாவை திருமணம் செய்ய எஸ்.ஐ. ஆக நடித்ததாக கூறினார். இதையடுத்து பியூட்டி பார்லர் உரிமையாளர் வெங்கடேஷ், புகாரின் பேரில் அபி பிரபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
* விசாரணை நடத்துவதுபோல் போட்டோ ஷூட்
அபி பிரபாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது அவர் காவல்துறை சீருடையுடன் இருந்த பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. இந்த புகைப்படங்கள், வீடியோக்களை சென்னையில் எடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டிதான் சிவா தனது பெற்றோரிடம் அபி பிரபாவை திருமணம் செய்ய சம்மதம் பெற்றார்.
இந்த வீடியோக்களில் ஒரு அறையில் அபி பிரபா எஸ்.ஐ. சீருடையில் இருந்து வாலிபர்கள் சிலரிடம் விசாரணை நடத்துவது போன்றும் உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது, ‘அபி பிரபா சப் இன்ஸ்பெக்டர் என கூறி யாரிடமும் மிரட்டி பணம் மோசடி எதுவும் செய்ததாக இதுவரை தகவல் இல்லை. தான் விரும்பிய வாலிபரை மணம் முடிக்க, இவ்வாறு செய்ததாக கூறி உள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
The post ரயிலில் மலர்ந்த காதல் ; 2வது திருமணத்துக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் சேல்ஸ் கேர்ள் டூ எஸ்.ஐ வரை… இளம்பெண்ணின் மெகா நாடகம் appeared first on Dinakaran.