சென்னை: காஞ்சிபுரம் அருகே எலக்ட்ரீஷியன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள், ₹30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை, அரசன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தாஸ்பிரகாஷ். ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார்.
இவர், தனது குடும்பத்தினருடன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் சேவை உற்சவத்தை காண்பதற்காக, நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் புஞ்சை அரசன்தாங்கலில் இருந்து மேல்மலையனூர் புறப்பட்டு சென்றுள்ளார். இரவு ஊஞ்சல் சேவை பார்த்துவிட்டு, நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தனர்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 30 சவரன் நகை மற்றும் ரொக்கம் 30 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், வீட்டை ஆய்வு செய்தனர்.
மோப்பநாய் வீட்டை சுற்றி ஓடிவந்து பிரதான சாலைக்கு வந்து நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், நள்ளிரவில் கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றவரின் வீட்டில் 30 சவரன், 30,000 கொள்ளை appeared first on Dinakaran.