×

குழந்தைகள் கண்ணெதிரே அண்ணன், அண்ணி வெட்டிக்கொலை: மனைவியுடன் தம்பி கைது

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி கே.பாப்பாரப்பட்டி ஊராட்சி மோட்டூர் அருகே தலைவிரிச்சான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). இவர்களுக்கு யுவஸ்ரீ (8), நவநிகா (3) என்ற 2பெண் குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்துவின் தம்பி முருகன் (33), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி (23). இவர் போச்சம்பள்ளி சிப்காட்டில் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மாரிமுத்துவுக்கும், முருகனுக்கும் வீட்டின் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில், மாரிமுத்து தனது பழைய வீட்டை இடித்து விட்டு, தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் மூலமாக, புது வீடு கட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பழைய வீட்டை இடித்ததால், புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து மாரிமுத்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த மாரிமுத்து, நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில், மனைவி ருக்மணி மற்றும் குழந்தைகளுடன் தலைவிரிச்சான் கொட்டாயில் புதிதாக வீடு கட்டும் பணியை பார்த்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த சிவரஞ்சனி அவர்களை வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அரிவாளுடன் அங்கு ஓடிவந்த முருகன், ருக்மணி மற்றும் மாரிமுத்துவை குழந்தைகளின் கண் முன்னால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இருவரும் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தனர். இதுகுறித்து சாம்பல்பட்டி போலீசார் முருகன் மற்றும் சிவரஞ்சனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குழந்தைகள் கண்ணெதிரே அண்ணன், அண்ணி வெட்டிக்கொலை: மனைவியுடன் தம்பி கைது appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Marimuthu ,Thalaivirichankottai ,Samalpatti K. Papbarapatti panchayat Motorur ,Krishnagiri district ,Rukmani ,Yuvashree ,Navanika ,Dinakaran ,
× RELATED ஊத்தங்கரை அருகே மண் அள்ளிய வாகனம் பறிமுதல்