×
Saravana Stores

ஒப்பந்த காலம் முடிந்தும் தனது விளம்பரத்தை பயன்படுத்தியதாக நகை கடைக்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கு: பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிரபல நகை கடைக்கு நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல நகைக்கடை நிறுவனமான அட்டிகா கோல்ட் நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக நடிகை தமன்னா நடித்திருந்தார். ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சம்பந்தப்பட்ட தனது விளம்பரத்தை அந்த நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் நகை கடை நிறுவனம் தமன்னாவின் விளம்பரங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் நீதிமன்ற தடை உத்தரவிற்கு பிறகும் தனது விளம்பரத்தை அந்த நிறுவனம் பயன்படுத்துவதாக கூறி தமன்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு ேநற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நகைக்கடை நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆஜராகி, தங்கள் நிறுவன தரப்பில் மனுதாரரின் விளம்பரத்தை நிறுத்தி விட்டதாகவும், ஆனால் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் எங்களின் பழைய விளம்பரங்களை தனிநபர் பயன்படுத்துவதற்கு தாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்றும் வாதிட்டார். இதையடுத்து, தமன்னாவின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு நகை கடை நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதேபோல் பவர் சோப் நிறுவனத்திற்கு மாடலாக பயன்படுத்திய விளம்பர ஒப்பந்தத்தை மீறி தமது விளம்பரங்களை அந்த நிறுவனம் பயன்படுத்துவதாகவும், இதற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி நடிகை தமன்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகை தமன்னா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை செப்டம்பர் 12ம் தேதிக்கு நீதபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

The post ஒப்பந்த காலம் முடிந்தும் தனது விளம்பரத்தை பயன்படுத்தியதாக நகை கடைக்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கு: பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamannaah ,Chennai ,Chennai High Court ,Attica Gold ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் நடிகை தமன்னாவிடம் ஈடி திடீர் விசாரணை