திருப்பூர், ஆக. 1: திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வருகையை கண்காணிக்க ஸ்கேடா கருவி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. என மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கூறினார்.
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் பாரபட்சமின்றி அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக திருப்பூர் இருப்பதால் குடிநீர் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இதனை, கருத்தில் கொண்டு மாநகராட்சி தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன், ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் குடிநீர் வருகையை கண்டறியும் கருவி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சிக்கு 2வது குடிநீர் திட்டத்தில் தினமும் 19 எம்.எல்.டி. குடிநீர் வருகிறது. இதுபோல் 3வது குடிநீர் திட்டத்தில் 75 எம்.எல்.டி. குடிநீரும், 4வது குடிநீர் திட்டத்தில் 80 எம்.எல்.டி. குடிநீரும் என சராசரியாக தினமும் 175 முதல் 180 எம்.எல்.டி. குடிநீர் திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனை, கண்காணிக்க ஸ்கேடா என்ற கருவி தமிழகத்தில் முதல் முறையாக திருப்பூரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. தற்போது, மாநகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு 5 மற்றும் 7 லட்சம், 15 லட்சம் கொள்ளளவு என 70 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளன. இதில் 60 பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 10 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த, நீர்தேக்க தொட்டிகளில் கருவியை பொருத்தினால் எவ்வளவு குடிநீர் வருகிறது. எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பதை கண்டறிய முடியும். இதனால், குடிநீர் வீணாகாது. கூடுதல் மற்றும் குறையை அறிந்து மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். எந்த பகுதிக்கு தேவையோ அங்கு மாற்று ஏற்பாடு செய்யலாம். இந்த கருவிக்கான பொருட்கள் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இது பயன்பாட்டிற்கு வரும்.’’ இவ்வாறு கூறினார்.
The post திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வருகையை கண்காணிக்க நவீன கருவி அறிமுகம் appeared first on Dinakaran.