×

வால்மீகி வாரிய நிதி, வீட்டுமனை முறைகேட்டை கண்டித்து கர்நாடக பாஜவினர் பேரவையில் விடிய விடிய பஜனை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரசுக்கு எதிராக பஜனை பாடல்களை பாடினர். கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 15ம் தேதி தொடங்கியது. நேற்று முன் தினம் கூட்டம் தொடங்கியதும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வீட்டுமனைகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ள விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் கொண்டுவந்தார்.

இதை சபாநாயகர் யு.டி.காதர் நிராகரித்தார். இதனால் அவையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜவினர், காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் தொடர் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று சித்தராமையா பதவி விலகுவரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தனர். அதன்படி நேற்று முன் தினம் இரவு பேரவையில் பாஜ உறுப்பினர்கள் தங்கினர்.

அப்போது காங்கிரஸ் அரசுக்கு எதிராக பஜனை பாடல்களை பாடினர். பின்னர் பேரவைக்குள் படுத்து உறங்கினர். மேலவையிலும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் தூங்குவதற்கு படுக்கை, தலையணை, போர்வைகள் உள்ளிட்டவை கொண்டு வழங்கப்பட்டன. இந்நிலையில் முதல்வர் சித்தராமையா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

The post வால்மீகி வாரிய நிதி, வீட்டுமனை முறைகேட்டை கண்டித்து கர்நாடக பாஜவினர் பேரவையில் விடிய விடிய பஜனை appeared first on Dinakaran.

Tags : Valmiki Varya Nithi ,Karnataka BJP ,Bengaluru ,Karnataka Legislative Assembly ,Congress ,Monsoon Session ,Karnataka Assembly ,Karnataka BJP Assembly ,
× RELATED தமிழ்நாடு ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கில்...