×

நீட் தேர்வு முறைகேடு வழக்கு டெல்லி ஐஐடி நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் டெல்லி ஐஐடி நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது. அப்போது கேள்வித்தாள் வெளியானது உள்பட பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது. அப்போது,’ நீட் கேள்வித்தாள் நாடு முழுவதும் வெளியானது தொடர்பான ஒரு ஆதாரத்தை சமர்ப்பித்தால் இந்த தேர்வை நாங்கள் ரத்து செய்ய தயாராக இருக்கிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் மனுதாரர்கள் தரப்பில் பீகார், அரியானா, ஜார்க்கண்டில் சில மையங்களில் கேள்வித்தாள் வெளியானது தொடர்பான தகவலை தெரிவித்தனர். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொள் மறுத்தனர். வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவலாக இருந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், சில மையங்களில், சில தவறுகள் நடந்துள்ளன. இந்த தவறுகள் ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்ய போதுமான ஆதாரமாக இல்லை என்று தெரிவித்தனர். தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,’ நீட் தேர்வு முழுத்தோல்வி அடையவில்லை. நாடு முழுவதும் தேர்வு முறை பாதிக்கப்பட்டதாக கூறுவது தவறு. சில தவறுகளுக்காக தேர்வு முழுவதையும் ரத்து செய்ய முடியாது’ என்றார்.

இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,’ இப்போது நாடு முழுவதும் கேள்வித்தாள் வெளியான தரவைக் காட்டுங்கள். ஆங்காங்கே சில பிரச்சனைகள் நடந்தன என்று வைத்துக் கொண்டாலும், நாங்கள் முழு நாட்டையும் கவனிக்கிறோம். இந்த கசிவு பரவலானது என்று கூற தரவுகளை எங்களுக்குக் காட்டுங்கள்’ என்று கேள்வி எழுப்பினர். அப்போது சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரிந்தர் ஹூடா, ‘தேசிய சோதனை முகமை வழங்கிய தகவல் அடிப்படையில் கேள்வித்தாள் கசிவு ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மற்றும் பாட்னா உள்பட ஒரு சில இடங்களில் நடந்துள்ளன’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட்,’ அது எங்களுக்கு தெரியும். ஆனால் நாடு முழுவதும் கேள்வித்தாள் வெளியானதா என்பதுதான் கேள்வி. மேலும் ஜாஜ்ஜார் மற்றும் சில இடங்களில் தவறான வினாத்தாள்கள் எப்படி வெளியானது. அங்கு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது குறித்து தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு சரியான விடை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்குமாறு டெல்லி ஐஐடி இயக்குனர் முடிவு செய்ய வேண்டும். இன்று மதியம் 12 மணிக்குள் அந்த கேள்விக்கு நிபுணர் குழுவினர் பதில் தயாரித்து தாக்கல் வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

The post நீட் தேர்வு முறைகேடு வழக்கு டெல்லி ஐஐடி நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,New Delhi ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...