புதுடெல்லி: பாஜ கட்சி தாமரை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஒன்றியத்தில் ஆளும் பாஜ கட்சியின் சின்னமாக தாமரை உள்ளது. தேர்தல்களில் போட்டியிட பாஜ தாமரை சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. இந்தநிலையில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பாஜ கட்சி தாமரை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
குறிப்பாக ஆர்பி சட்டம் 1951ன் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிக்கு கிடைக்கும் பலன்களைப் பெற பாஜகவுக்கு உரிமை கிடையாது” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் ஜே.பி.பரிதிவாலா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது தனது பெயரை புகழுக்கு கொண்டு போகும் முயற்சியாக மனுதாரர் பயன்படுத்தி உள்ளார். எனவே இந்த வழக்கை விசாரிக்க முடியாது” என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு appeared first on Dinakaran.