×

கடலோரம், மலைநாடு பகுதியில் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை சீர்குலைத்த நிலச்சரிவு: கடந்த 2009 முதல் 2023 வரை துயரங்களின் கசப்பான நினைவு

பெங்களூரு: மழை, மனிதன் மற்றும் இயற்கையின் உயிர்நாடி. அதிகரித்தாலும் குறைந்தாலும் விளைவு பயங்கரமானது. கடந்த 14 ஆண்டுகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு பேரிடர்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதன் முழுமையான தகவல்களின் தொகுப்பு. மாநிலத்தின் கடலோரப் பகுதியில் பெய்த கனமழை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன், சிக்கமகளூரு, மங்களூரு, வடகனரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. வடகனரா மாவட்டம், அங்கோலா தாலுகாவில் உள்ள ஷிரூரு கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 66ல் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வடகனரா மாவட்டம், கார்வார் தாலுகாவில் பெய்து வரும் கனமழையால் வீட்டின் அருகே உள்ள மலை இடிந்து விழுந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். பேரிடர்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சில பெரிய நிலச்சரிவு பேரழிவுகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை:
* 2.10.2009: வடகனரா மாவட்டத்தில் கார்வார் தாலுகாவின் கடவாடா கிராமத்தில் உள்ள மடிபாக் என்ற இடத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. ஒன்பது வீடுகள் இடிந்து 24 பேர் உயிருடன் புதைக்கப்பட்டனர். அக்டோபர் 2 மற்றும் 3 தேதிகளில் பல நிலச்சரிவுகள் காரணமாக கார்வார் மற்றும் அங்கோலா இடையே தேசிய நெடுஞ்சாலை 17 மூடப்பட்டது.
* 26.10.2009: பெல்தங்கடி தாலுகாவில் உள்ள உஜிரேயில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
* 26.06.2010: மங்களூரு ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பாடில்-தோக்கூர் சந்திப்புக்கும் இடைபட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மங்களூருவில் உள்ள குலசேகர் அருகே ஜூன் 27ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. ஜூன் 30 வரை இந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
* 29.07.2010: மங்களூரு சக்திநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காயமடைந்தார். ஆகஸ்ட் 1ம் தேதி அம்பலமொகரு கிராம ஊராட்சிக்குட்பட்ட எலியார்படவு பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு முற்றிலும் சேதமடைந்தது. 30க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
* 08 .11.2010: வடகனரா மாவட்டத்தில் கார்வார் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் பெரிய பாறைகள் விழுந்தன. மங்களூரு-மும்பை மத்ஸ்யகந்தா எக்ஸ்பிரஸ் பாறைகளில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் பலத்த காயமடைந்தார் மற்றும் 14 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றனர்.
* 15, 16, 17 ஆகஸ்ட் 2018: அந்த ஆண்டில், குடகு மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளின் சராசரி ஆண்டு மழையை விட 32% கூடுதலாக மழையை பெற்றது. இதனால் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உயிர் சேதம், சொத்து சேதம், உள்கட்டமைப்பு மற்றும் சாலை இணைப்பு சீர்குலைவு ஏற்பட்டது. மங்களூருவில் இருந்து பெங்களூருவை இணைக்கும் ஷீரடி மற்றும் சம்பாஜே சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இப்பகுதியில் 105 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
* 06.08.2020: காவிரி ஆற்றின் தலைப்பகுதியான தலைகாவிரியில் நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்தன. குடகு மாவட்டம், பாகமண்டலம் அருகே பிரம்மகிரி மலையில் உள்ள தலைகாவிரி கோயில் அருகே சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், 2007, 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 5 இறப்புகள் பதிவாகியுள்ளன.
* 25.07.2021: தொடர் மழை காரணமாக, மாநிலத்தின் கடலோர, மலைப்பகுதி மற்றும் வடக்கு உள்பகுதிகளில் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். மூவர் காணாமல் போயினர்.
* 07.07.2022: தென்கனரா மாவட்டம், பண்ட்வால் தாலுகாவின் பஞ்சிக்கல்லு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று தொழிலாளர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
* 02.08.2022: தென்கனரா, வடகனரா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர். சாலை இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை சாலையை சீரமைக்க பரிந்துரை செய்தார்.
* 25.03.2023: தெனகனரா மாவட்டம், சூள்யா தாலுகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
* 07.07.2023: மங்களூரு நந்தவராவில் மலை சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பல வீடுகள் சேற்றில் புதைந்தன. கனமழை காரணமாக மலையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது.
* 16.07.2024: வடகனரா மாவட்டம், அங்கோல தாலுகா, ஷிரூருவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 10 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

* ஓன்றிய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்றத் தகவல் மையத்தின்படி கர்நாடகாவில் (2018-2022) நிலச்சரிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை.
ஆண்டு உயிரிழப்பு
2018 22
2019 21
2020 46
2021 02
2022 02
2023 03
2024 10

The post கடலோரம், மலைநாடு பகுதியில் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை சீர்குலைத்த நிலச்சரிவு: கடந்த 2009 முதல் 2023 வரை துயரங்களின் கசப்பான நினைவு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கில்...