×

திருமலையில் தேவஸ்தானம், உணவுதரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை பக்தர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய தனியார் ஓட்டலுக்கு சீல்

*லைசென்ஸ் ரத்து செய்து செயல் அதிகாரி அதிரடி

திருமலை : திருமலையில் தேவஸ்தானம், உணவுதரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பக்தர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய தனியார் ஓட்டலுக்கு சீல் வைத்து லைசென்ஸ் ரத்து செய்து செயல் அதிகாரி ஷியமளாராவ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானம், மாநில உணவு தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் இணைந்து திருமலையில் உள்ள பாஞ்சன்யம், கெளஸ்துபம் ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களில் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக உணவு தரக்கட்டுப்பாட்டு துறையின் நடமாடும் ஆய்வகத்தை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் ஓட்டல்களில் சமையலறை, பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பேசியதாவது: ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரமான உணவுகளை வழங்குவதற்காக பல்வேறு சிறிய மற்றும் பெரிய அளவிலான ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுக்கு ஒப்பந்த முறையில் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தொடர்ந்து சில ஓட்டல்களில் தரமற்ற உணவு சமைக்கப்படுவதாக புகார்கள் வந்தபடி இருந்தது. இதனால் உணவு தர கட்டுப்பாட்டு துறை சார்பில் இன்று(நேற்று) கெளஸ்துபம் அருகே உள்ள பாலாஜி ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வில் சமையலறை மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதோடு தரமற்ற பருப்பு, அழுகிய காய்கறிகள், பழைய உணவுப் பொருட்கள் ப்ரிட்ஜில் வைத்து அதனை சூடு வைத்து பக்தர்களுக்கு வழங்க இருந்ததும், தடை செய்யப்பட்ட டேஸ்டிங் சால்ட், நிறம் அளிக்கும் கலர் பவுடர்கள், பயன்படுத்திய எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவது உள்ளிட்டவை கண்டறியப்பட்டது.

குறிப்பாக ஏழை எளிய மக்களுக்காக அரசு வழங்கக்கூடிய ரேஷன் அரிசி இந்த ஓட்டலில் வரும் வாடிக்கையாளர்களுக்கு சமைத்து பரிமாறுகிறார்கள். எனவே முதலில் சமையலறை சுகாதாரம் இல்லாமல் இருப்பதால் சமையல் அறைக்கு சீல் வைக்கப்படுகிறது. தற்பொழுது சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பி ஆய்வு அறிக்கை வைத்து ஓட்டலுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும்.

இந்த சோதனை இன்று ஒரு நாள் மட்டும் கிடையாது. இனி தொடர்ந்து உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு லைசன்ஸ் இல்லாமல் செயல்படும் ஓட்டல்கள் மற்றும் தரமற்ற, தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் மாநில உணவு தரக் கட்டுப்பாட்டு துறை ஆணையர் பூர்ணசந்திர ராவ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post திருமலையில் தேவஸ்தானம், உணவுதரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை பக்தர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய தனியார் ஓட்டலுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Devasthanam ,Tirumala ,Executive ,Shyamala Rao ,Dinakaran ,
× RELATED திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்...