×

பெண் கண்டக்டர், பயணிகள் பிரசவம் பார்த்தனர்; அரசு பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்: தெலங்கானா சாலை போக்குவரத்து கழகம் அறிவிப்பு

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் அரசு பஸ்சில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டதால் பெண் கண்டக்டர், பயணிகள் பிரசவம் பார்த்த நிலையில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பஸ்சில் பயணிக்க பாஸ் வழங்கப்படுவதாக மாநில சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த முஷிராபாத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. கர்ப்பிணியான இவர் கடந்த 4ம் தேதி அரசு பஸ்சில் பகதூர்புரா செல்ல ஏறி பயணம் மேற்கொண்டார். பஸ்சை அலி என்பவர் ஓட்டினார். கண்டக்டராக பி.சரோஜா பணியில் இருந்தார்.

இந்நிலையில், பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஸ்வேதாவிற்கு பிரசவவலி ஏற்பட்டு துடித்தார். இதனையறிந்த பஸ் டிரைவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் பயணிகளை கீழே இறக்கிவிட்டு பெண் கண்டக்டர் சக பெண் பயணிகளுடன் இணைந்து பஸ்சிலேயே பிரசவம் பார்த்தனர். இதில், ஸ்வேதாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தாய், குழந்தையை அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஜ்ஜனார் ஆகியோர் பெண் கண்டக்டருக்கும், டிரைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில் தெலங்கானா அரசு பஸ்சில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் அரசு பஸ்சில் இலவசமாக பயணிக்க பஸ் பாஸ் வழங்கப்படும் என டி.ஜி.ஆர்.டி.சி(தெலங்கானா சாலை போக்குவரத்து கழகம்) அறிவித்துள்ளது.

The post பெண் கண்டக்டர், பயணிகள் பிரசவம் பார்த்தனர்; அரசு பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்: தெலங்கானா சாலை போக்குவரத்து கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana Road Transport Corporation ,Tirumala ,Telangana ,road transport corporation ,Dinakaran ,
× RELATED ஐதராபாத் துர்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை...