×

15 நாளில் 10 பால விபத்துகள்பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுடெல்லி: பால விபத்துகள் அரங்கேறும் பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பால விபத்துகளுக்கு மிகவும் பெயர் பெற்ற மாநிலமாக பீகார் உருவாகி வருகிறது. 2022ம் ஆண்டு மே மாதம் தொடங்கி 2023ம் ஆண்டு மே வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 7 பால விபத்துகள் நடந்துள்ளன.

இதில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ள பாலங்களும், கட்டுமான பணி நடைபெற்று வரும் பாலங்களும் அடங்கும்.  அந்த வகையில் பீகாரில் நடப்பாண்டும் பால விபத்துகள் நீடிக்கின்றன. கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் முழுவதும் அல்லது பகுதியளவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பாலங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாலம் கட்டுமானத்தில் தரமற்ற பொருள்கள் பயன்படுத்தியதே விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் முக்கிய பகுதிகளில் இருந்த 10 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் மற்ற பாலங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் இதில் பொதுமக்களின் உயிரும் அடங்கியுள்ளது. எனவே தற்போது வரை ஏற்பட்டுள்ள பால விபத்துகளை அடிப்படையாக கொண்டு பீகார் மாநிலத்தில் இருக்கும் அனைத்து பாலங்களையும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பலவீனமான கட்டமைப்பு கொண்ட பாலங்களை இடிக்கவும் பீகார் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post 15 நாளில் 10 பால விபத்துகள்பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Supreme Court ,New Delhi ,United Janata Dal ,BJP ,Nitish Kumar.… ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...